திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard<< முந்தய அதிகாரம் | முகப்பு |
       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 133                   ஊடலுவகை
1321. இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

மு.வ உரை:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானாலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்யவல்லது.,

1322. ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி
வாடினும் பாடு பெறும்.

மு.வ உரை:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீர்இயைந் தன்னார் அகத்து?

மு.வ உரை:
நிலத்தோடு நீர் பொருந்திக் கலந்தாற்போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதைவிட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதோ?

1324. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.

மு.வ உரை:
காதலரைத் தழுவிக் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்குஒன்று உடைத்து.

மு.வ உரை:
தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது,

1326. உணலினும் உண்டது அறல்இனிது: காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

மு.வ உரை:
உண்பதைவிட முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது; அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

1327. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

மு.வ உரை:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர்; அந்த உண்மை, ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

மு.வ உரை:
நெற்றி வியர்க்கும்படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை, ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?

1329. ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

மு.வ உரை:
காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

1330. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

மு.வ உரை:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

------

Back to Top