திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 127                   அவர்வயின்விதும்பல்
1261. வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும்: அவர்சென்ற
நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.

மு.வ உரை:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

1262. இலங்கிழாய் ! இன்று மறப்பின் என் தோள்மேல்
கலம்கழியும் காரிகை நீத்து.

மு.வ உரை:
தோழி! காதலரின் பிரிவால் துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்துவிட்டால், அழகு கெட்டு என்தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

மு.வ உரை:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர்; திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடிருக்கின்றேன்.

1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக்
கோடுகொடு ஏறும்என் நெஞ்சு.

மு.வ உரை:
முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையை நினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின்மேலும் ஏறிப் பார்க்கின்றது.

1265. காண்கமன் கொண்கனைக் கண்ணார; கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

மு.வ உரை:
என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; கண்டபிறகு, என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலைநிறம் தானே நீங்கி விடும்.

1266. வருகமன் கொண்கன் ஒருநாள்: பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

மு.வ உரை:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

1267. புலப்பேன்கொல்: புல்லுவேன் கொல்லோ: கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்?

மு.வ உரை:
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?

1268. வினைகலந்து வென்றீக வேந்தன்: மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

மு.வ உரை:
அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அன்றுவரும் மாலைப்பொழுதிற்கு விருந்து செய்வோம்.

1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும், சேண்சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

மு.வ உரை:
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல(நெடிதாகக்) கழியும்.

1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம்
உள்ளம் உடைந்துஉக்கக் கால்?

மு.வ உரை:
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன? பெற்று விட்டால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?

------


Back to Top