திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 125                   நெஞ்சொடுகிளத்தல்
1241. நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்துஒன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து ?

மு.வ உரை:
நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்லமாட்டாயோ?

1242. காதல் அவர்இலர் ஆகநீ நோவது
பேதமை வாழிஎன் நெஞ்சு.

மு.வ உரை:
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே!

1243. இருந்துஉள்ளி என்பரிதல் நெஞ்சே ! பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

மு.வ உரை:
நெஞ்சே!(என்னுடன்)இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

மு.வ உரை:
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும் போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

1245. செற்றா ரெனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர் ?

மு.வ உரை:
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கை விட முடியுமோ?

1246. கலந்துஉணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துஉணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

மு.வ உரை:
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணரமாட்டாய்! பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய்.

1247. காமம் விடுஒன்றோ நாண்விடு நல்நெஞ்சே
யானோ பொறேன்இவ் இரண்டு.

மு.வ உரை:
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது

1248. பரிந்துஅவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு!

மு.வ உரை:
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருத்தி அவர் வந்து அன்பு செய்யவில்லையே என்று ஏங்கிப்பிரிந்தவரின் பின் செல்கின்றாய்! நீ பேதை.

1249. உள்ளத்தார் காத லவர்ஆக உள்ளிநீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு?

மு.வ உரை:
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளததில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

மு.வ உரை:
நம்மோடு பொருந்தியிருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது, இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

------


Back to Top