திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 123                   பொழுதுகண்டிரங்கல்
1221. மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

மு.வ உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்லை: (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்!

1222. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை?

மு.வ உரை:
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?

1223. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

மு.வ உரை:
பனி தோன்றிய பசந்த நிறம்கொண்ட மாலைப்பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

1224. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

மு.வ உரை:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவதுபோல் மாலைப்பொழுது(என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

1225. காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?

மு.வ உரை:
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன.?

1226. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.

மு.வ உரை:
மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக் காதலர் என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

1227. காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி
மாலை மலரும்இந் நோய்.

மு.வ உரை:
இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது

1228. அழல்போலும் மாலைக்குத் தூதுஆகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

மு.வ உரை:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருந்தும் மாலைப் பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.

1229. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

மு.வ உரை:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னப்போல் துன்பத்தால் வருந்தும்.

1230. பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

மு.வ உரை:
(பிரிவுத்துன்பத்தால்) மாயாமல் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைத்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

------


Back to Top