திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 118                   கண்விதுப்பழிதல்
1171. கண்தாம் கலுழ்வது எவன்கொலோ? தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

மு.வ உரை:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள் தாமே இப்போது அழுவது ஏன்?

1172. தெரிந்துஉணரா நோக்கிய உண்கண் பரிந்துஉணராப்
பைதல் உழப்பது எவன்?

மு.வ உரை:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்புகொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

1173. கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்:
இதுநகத் தக்கது உடைத்து.

மு.வ உரை:
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்துநோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

1174. பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா
உய்வுஇல்நோய் என்கண் நிறுத்து.

மு.வ உரை:
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டுவிட்டன.

1175. படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண்

மு.வ உரை:
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள்,இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

1176. ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

மு.வ உரை:
எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

1177. உழந்துதுழந்து உள்நீர் அறுக விழைந்துஇழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண் !

மு.வ உரை:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றுஅவர்க்
காணாது அமைவில கண்.

மு.வ உரை:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார். அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

1179. வாராக்கால் துஞ்சா: வரின்துஞ்சா: ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

மு.வ உரை:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என்கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

1180. மறைபெறல் ஊரார்க்கு அரிதுஅன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.

மு.வ உரை:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

------


Back to Top