திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       காமத்துப்பால்                       கற்பியல்

              அதிகாரம்: 117                   படர்மெலிந்திரங்கல்
1161. மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை: இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

மு.வ உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால்,இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது.

1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

மு.வ உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை; நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

1163. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

மு.வ உரை:
துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருபக்கமும் தொங்குகின்றன.

1164. காமக் கடல்மன்னும் உண்டே: அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

மு.வ உரை:
காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால், அதை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.

1165. துப்பின் எவன்ஆவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

மு.வ உரை:
(இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச்செய்ய வல்லவர்,(துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரே?

1166. இன்பம் கடல்மற்றுக் காமம்: அஃதுஅடும்கால்
துன்பம் அதனிற் பெரிது.

மு.வ உரை:
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

1167. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

மு.வ உரை:
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்,

1168. மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்துஇரா:
என்அல்லது இல்லை துணை.

மு.வ உரை:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமலிருக்கின்றது.

1169. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

மு.வ உரை:
(பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை.

1170. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

மு.வ உரை:
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

------


Back to Top