திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       களவியல்

              அதிகாரம்: 115                   அலரறிவுறுத்தல்
1141. அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்.

மு.வ உரை:
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

1142. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர்.

மு.வ உரை:
மலர்போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

1143. உறாஅதோ ஊரறிந்த கௌவை? அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

மு.வ உரை:
ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

1144. கவ்வையால் கவ்விது காமம்: அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

மு.வ உரை:
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

1145. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

மு.வ உரை:
காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

1146. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

மு.வ உரை:
காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்டசெய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

1147. ஊரவர் கௌவை எருஆக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

மு.வ உரை:
இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

1148. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

மு.வ உரை:
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

மு.வ உரை:
அஞ்சவேண்டா என்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?

1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர்: யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

மு.வ உரை:
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

------


Back to Top