திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       காமத்துப்பால்                       களவியல்

              அதிகாரம்: 109                   தகையணங்குறுத்தல்
1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

மு.வ உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!

1082. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்குஅணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.

மு.வ உரை:
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையயும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

1083. பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை: இனிஅறிந்தேன்
பெண்தகையால் பேரமர்க் கட்டு.

மு.வ உரை:
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

1084. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

மு.வ உரை:
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து.

மு.வ உரை:
எமனோ? கண்ணோ? பெண்மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

1086. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
செய்யல மன்இவள் கண்.

மு.வ உரை:
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

1087. கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

மு.வ உரை:
மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.

1088. ஒள்நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.

மு.வ உரை:
போரக்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!

1089. பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து.

மு.வ உரை:
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

1090. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

மு.வ உரை:
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை

------


Back to Top