திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       குடியியல்

              அதிகாரம்: 108                   கயமை
1071. மக்களே போல்வர் கயவர்: அவரன்ன
ஒப்பாரி் யாம்கண்டது இல்.

மு.வ உரை:
மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

1072. நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்:
நெஞ்சத்து அவலம் இலர்.

மு.வ உரை:
நன்மை அறிந்தவரைவிடக் கயவரே நல்ல பேறு உடையவர்; ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

1073. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.

மு.வ உரை:
கயவரும் தேவரைப் போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

மு.வ உரை:
கீழ்மக்கள் தமக்குக் கீழ்ப்பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரைவிடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

1075. அச்சமே கீழ்களது ஆசாரம்: எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.

மு.வ உரை:
கீழ்மக்களின் ஆசாரத்திற்குக் காரணமாக இருப்பது அச்சமே; எஞ்சியவற்றில், அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்.

மு.வ உரை:
கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை போன்றவர்.

1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

மு.வ உரை:
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதறமாட்டார்.

1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர்: கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

மு.வ உரை:
அணுகிக்குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

மு.வ உரை:
கீழ்மகன் பிறர் உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர்மேல் பொறாமைகொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

1080. எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

மு.வ உரை:
கயவர் எதற்கு உரியவர்? ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

------


Back to Top