மூலம்:
1041 . இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
பரிமேழலகர் உரை:
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு
வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்;
இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல
இன்னாதது வறுமையே, பிறிதில்லை.
(இன்னாதது - துன்பஞ் செய்வது. ஒப்பது இல்லை
எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று.)
---
மு.வ உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால்,
வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்,
G.U.Pope:
You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.
Explanation
There is nothing that afflicts (one) like poverty.
மூலம்:
1042 . இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
பரிமேழலகர் உரை:
இன்மை என ஒருபாவி - வறுமை என்று
சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும்
இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு
மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக
வரும்.
('இன்னாமையென ஒருபாவி' என்பதற்கு மேல்
''அழுக்காறென ஒரு பாவி'' [குறள்.168] என்புழி
உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன
ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை
இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப்
'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.) --
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால்,
அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற்
போகும் நிலைமை வரும்.
G.U.Pope:
Malefactor matchless! poverty destroys
This world's and the next world's joys.
Explanation
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).
மூலம்:
1043 . தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
பரிமேழலகர் உரை:
தல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று
சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும்
தொகையாகக் கெடுக்கும் - தன்னால்
பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு
ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும்.
(நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின்,
நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின்
தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும்
இளிவந்த சொற்களையும் உளவாக்கலான்,
அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார்.
''குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்'' [மணி
11 - 76] என்றார் பிறரும். தோலாவது ''இழுமென்
மொழியால் விழுமியது நுவறல்'' [தொல். பொருள்.
செய்யுள். 239] என்றால் தொல்காப்பியனாரும். இதற்கு
'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப்
பெயராயினும் 'உடம்பு' கெடுக்கும் என்றற்கு ஓர்
பொருட்சிறப்பு இல்லாமை அறிக.) ---
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால்
அவனுடைய பழைமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக்
கெடுக்கும்.
G.U.Pope:
Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame.
Explanation
Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.
மூலம்:
1044 . இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
பரிமேழலகர் உரை:
இற்பிறந்தார் கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத
குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும்
சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய
சோர்வினை நல்குரவு உண்டாக்கும்.
(சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற
நின்றது. இளிவந்த சொல் - இளி வருதற்கு ஏதுவாகிய
சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல்.
சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி
ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக
நினைத்தல்.) ---
மு.வ உரை:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும்
சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கிவிடும்.
G.U.Pope:
From penury will spring, 'mid even those of noble race,
Oblivion that gives birth to words that bring disgrace.
Explanation
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.
மூலம்:
1045 . நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
பரிமேழலகர் உரை:
நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று
சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள்
சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும்.
(குரை - இசை நிறை. செலவு-விரைவின்கண் வந்தது.
துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத்
துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை
நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல்
துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும்,
மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும்,
அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும்
முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின்,
எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார்.
இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக
வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
G.U.Pope:
From poverty, that grievous woe,
Attendant sorrows plenteous grow.
Explanation
The misery of poverty brings in its train many (more) miseries.
மூலம்:
1046 . நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
பரிமேழலகர் உரை:
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற்
பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்
கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார்
சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும்.
(பொருளின்மையைத் தலைப்படுதலாவது, 'யாம் இவர்
சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி
இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும்' என்று
அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய்
முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.) ---
மு.வ உரை:
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்ன
போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல்
பயன்படாமல் போகும்.
G.U.Pope:
Though deepest sense, well understood, the poor man's words convey,
Their sense from memory of mankind will fade away.
Explanation
The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.
மூலம்:
1047 . அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
பரிமேழலகர் உரை:
அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத
நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல
நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக்
கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.
(அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள்
ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர்.
சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை
விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக்
கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அது நோக்கிச்
சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.) ---
மு.வ உரை:
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற
தாயாலும் அவன் அயலனைப் போல் புறக்கணித்துப்
பார்க்கப்படுவான்.
G.U.Pope:
From indigence devoid of virtue's grace,
The mother e'en that bare, estranged, will turn her face.
Explanation
He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.
மூலம்:
1048 . இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
பரிமேழலகர் உரை:
நெருநலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும்
கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த
நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும்
என்பால் வரக்கடவதோ; வந்தால் இனி யாது
செய்வேன்?
(அவ் வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.
1045) துன்பங்கள், நெருநல்மிக வருந்தித் தன் வயிறு
நிறைத்தான் ஒருவன் கூற்று.) ---
மு.வ உரை:
நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய வறுமை இன்றும்
என்னிடம் வருமோ! (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி
வருந்துவான்,)
G.U.Pope:
And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?
Explanation
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?
மூலம்:
1049 . நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது.
பரிமேழலகர் உரை:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம்
மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து
உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு
அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம்
இல்லை.
('நெருப்பினும் நிரப்புக் கொடிது,' என்றவாறாயிற்று.
இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும்
நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால்
வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
G.U.Pope:
Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.
Explanation
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.
மூலம்:
1050 . துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
பரிமேழலகர் உரை:
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும்
பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத்
துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்: உப்பிற்கும்
காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும்
காடிக்கும் கூற்றாம்.
(மானம் அழியாமையின் செயற்பாலது
அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே
விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார். நின்ற
தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது
கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப்பண்ணுதலின்,
அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி,
'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின்
ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை
மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர்.
இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)
---
மு.வ உரை:
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக
இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக
இருப்பதே ஆகும்.
G.U.Pope:
Unless the destitute will utterly themselves deny,
They cause their neighbour's salt and vinegar to die.
Explanation
The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.