சைவ வினா விடை - Question and Answer

வினா 1. சைவம் என்றால் என்ன?

விடை: சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆகுதல், என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.


வினா 2. திருமூலருக்கு முன் சைவம் இல்லையா?

விடை: ஏன் இல்லை, மணிமேகலையில் சைவம் குறிப்பிடப்படுகின்றதே!


வினா 3. மணிமேகலையில் எங்கு எவ்வாறு வருகின்றது?

விடை: துறவு மேற்கொண்ட மணிமேகலை வஞ்சி நகருக்குச் சென்றான். அங்குள்ள பல்வேறு சமய வாதிகளைச் சந்தித்து அவர்களுடைய சமயக் கொள்கைகளைக் கேட்டறிந்தாள். வைதிக சமயத்தைச் சார்ந்த அளவை வாதியைப் பார்த்து “நிங்கடைப்பிடி இயம்பு” (நீ பின்பற்றும் கொள்கையைக் கூறுவாயாக) என்று மணிமேகலை கேட்டாள். அளவைவாதி 1. காட்சி 2. கருதல் 3. உவமம் 4. ஆகமம் 5. அருத்தாபத்தி 6. இயல்பு 7. ஐதிகம் 8. அபாவம் 9. ஒழிபு (பாரிசேடம்) 10. சம்பவம் என்று பத்துவகை அளவைகளைக் கூறி அவற்றை விளக்கி யார் யார் எவ்வெவ்வளவுகளை மேற்கொள்கின்றனர் என்பதனையும் விரித்துக் கூறினான். அதனை அடுத்து மணிமேகலை சைவவாதியைப் பார்த்து முழுமுதற்கடவுள் ஈசனே என்று கூறும் உன்னுடைய வணங்கும் தெய்வம் எத்தகையது கூறுக என்று வினவினாள், “இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி நேர்படுதலும் பரசும் நின் தெய்வம் எப்படித்து” என்பது மணிமேகலைத் தொடர். தமிழ் இலக்கியங்களிலேயே சைவம் என்ற சொல் இவ்வாறு மணிமேகலையில் முதன் முதலில் காணப் பெறுகின்றது.


வினா 4. சைவம் என்ற சொல் மணிமேகலையில்தான் முதலில் காணப் பெறுகின்றது என்றால் சிவம் என்ற சொல் முதலில் எங்கு காணப் பெறுகின்றது?

விடை: சிவன், சிவம் என்ற சொற்கள் “சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை”, என்றும் “அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்” என்றும் திருமந்திரத்தில் முதலில் காணப் பெறுகின்றன.


வினா 5. சிவன், சிவம் என்ற இரண்டில் வேறுபாடு உண்டா?

விடை: சிவன் ஆண்பால், சிவை பெண்பால், சிவம் பொதுச்சொல்.


வினா 6. சிவன் என்ற சொல்லின் பொருள் என்ன?

விடை: செம்மையானவன் என்பது பொருள், கிரியர்சன் என்ற மேல் நாட்டு ஆய்வாளர், மறைமலையடிகளார் முதலியோர் செம்மையானவன் என்று பொருள் தரும் சிவன் தமிழ்ச் சொல்லே என்று நிலை நாட்டியுள்ளனர். உருத்திரன் அழித்தலைச் செய்பவன், சிவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்பவன். ‘சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” என்று திருநாவுக்கரசர் பொருட்காரணத்தை விளக்கியுள்ளார். சிவஞான முனிவர் காஞ்சிப்புராணத்தில் “குறைவிலா மங்கல குணத்த னாகலின் நிறைமலம் அநாதியின் நீங்கிநிற்றலின் அறைகுவர் சிவனென அறிவின் மேலோர்” என்று சிவனுக்கு விளக்கம் தந்துள்ளார்.


வினா 7. சங்க இல்க்கியங்களில் சிவன் எவ்வாறு அழைக்கப் பெறுகிறான்?

விடை: அருந்தவத்தோன், அறவோன், ஆலமர் செல்வன், இறைவன், இயவுள், கடவுள், காடு உறை கடவுள், கறைமிடற்றோன், உமைபாகன், காய்கடவுள், கொலைவன், நீலமணிமிடற்றன், சடையன், சூலப்படையன், பிறைசூடி, மழுப்படையன், முக்கட்செல்வன் முதலிய பெயர்களில் அழைக்கப் பெறுகின்றான். “காய்கடவுள்” என்று பரிபாடலிலும் “கொலைவன் சூடிய குழவித்திங்கள்” என்று கலித்தொகையிலும் வருவன அழித்தல் கடவுள் என்ற பொருளில் ஆகும். “நீரும், நிலனும், தீவும், வளியும் மாகவிசும்பொடு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நொடியோன்” என்று மதுரைக்காஞ்சியில் வருவது படைத்தல் கடவுள் என்ற பொருளில் ஆகும். “காரி உண்டிக்கடவுள்” என்று மலை படு கடாமில் வருவது நஞ்சுண்டு உலகத்தைக் காத்தவன் என்று பொருளில் ஆகும். “நன்றாய்ந்த நீள்நிமிர் சடைமுது முதல்வன்” என்று புறநானூற்றில் வருவது சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்ற பொருளில் ஆகும். கங்கையைச்சடையில் கொண்டுள்ள இறைவனும் இறைவியும் கயிலையில் வீற்றிருந்தான். அரக்கர் தலைவனாகிய இராவணன் பத்துதலைகளுடன் தம்கைகளால் கயிலையை எடுத்தான் என்ற செய்தி கலித்தொகையில் வருகின்றது. இந்திய மொழிகளிலேயே இராவணன் கயிலையை எடுத்த செய்தி இதுதான் முதன்மையானாதாகும்.


வினா 8. இத்தகையபுராணச் செய்திகள் வேறு என்னென்ன வருகின்றன?

விடை: உமாதேவியுடன் இருந்தது, எருதுவாகனம், எருதுக்கொடி (ஆனேற்றுக்கொடி) கங்கையைச் சடையில் அணிந்தது, பிறையைச் சூடியது, கபாலம் ஆடுதல், கொடு கொட்டி ஆடுதல், பாண்டரங்கம் ஆடுதல், புலித்தோல் ஆடையாக அணிந்தது, முக்கண் கொண்டது சூலப்படை, மழு கொண்டிருந்தல், முப்புரம் எரித்தல், ஆலமரத்தின் கீழ் வீற்றிருத்தல், முதலிய புராணச்செய்தியும் தத்துவமும் உண்டு, விரித்தால் அதிகமாகி விடும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.


வினா 9. புராணச் செய்திகளை ஆங்காங்கே பார்த்துக் கொள்ளலாம் என்றாலும் கபாலம் ஆடுதல், கொடுகொட்டி ஆடுதல், பாண்டரங்கம் ஆடுதல் ஆகியவற்றை மட்டும் விளக்கிக்கூறுங்களே.

விடை: கலித்தொகை கடவுள் வாழ்த்தில் இவை வருகின்றன. அப்பாடல் நல்லந்துவனார் என்ற சங்க காலப்புலவர் பாடியது. அவரே கலித்தொகையைத் தொகுத்தவர். நெய்தல் கலியையும் பாடியவராவர். பாடல் மிகப்பெரியது. நச்சினார்க்கினியார் உரைக்கு பேரறிஞர் இளவழகனார் விளக்கம் எழுதியுள்ளார். அவ்விளக்கம் எளிமையாக உள்ளதால் அதனையே தருகிறேன். சிவபிரான் திருநடம் புரிந்து எல்லாவற்றையும் அழிக்கும் போது அவங்கைகொட்டி ஆடும் கூத்துக் கொடுகொட்டி எனவும் அங்ஙனம் அழிந்தவற்றின் சாம்பலைப் பூசி ஆடும் கூத்துப் பாண்டரங்கம் எனவும் தலையோடு முதலிய எலும்புகளைத் தாங்கி நின்று ஆடும் கூத்து கபாலம் எனவும் கூறப்படும். பாண்டு அரங்கம் – வெள்ளை அரங்கம், அதுசாம்பல் நிறைந்த இடுகாடு. சாம்பற்பூசி அங்கு ஆடும் கூத்துக்கு அதுவே பெயராயிற்று. பாண்டு வெண்மைப் பொருளில் வருதல், பாண்டு கம்பளம் துளக்கியதாகலின் ( மணிமேகலை 14-29 ) என்பதிற்காண்க, கபாலம் – தலையோடு. இங்ஙனம் இறைவன் எல்லாவற்றையும் அழிக்குங்கால் அவன் தன் அருளியல்பு மேலே விளங்கித் தோன்றாதாகலின், அம்மை அசையாமலிருக்க ஐயன் நடம்புரிவான் என்ப. அருளியல்பாகிய அம்மை இவ்வழிக்கும் செயலில் கலந்து கொள்வாள் என்பது முறையாகாமையின் நின் ஆட்டத்துக்கு அவள் தாளம் தருவாளோ? தரமாட்டாளோ? என்னும் எதிர்மறைப் பொருளில் கொண்டசீர் தருவாளோ? முற்பாணி தருவாளோ? எனவந்தன. ஆயினும் இறைவனும் அம்மையும் தவிர ஏனை யெல்லாம் அழிந்தொழிவதால் அந்நிலையில் வேறு யாரும் தாளம் தருதற்க்கில்லாமையாலும் அழிக்கும் தொழிலும் அருள் ஏதுவாகவே நிகழ்தலாலும் எப்படியும் அம்மையே நின் ஆட்டத்துக்குத் தாளம் தரவேண்டுவது கட்டாயமாய் இருக்கின்றதென்பார் பாணியும் தூக்கும் சீரும் என்றிவை மாணிழை அரிவை காப்ப நீ ஆடி அமர்ந்தனை என்று இறுதியில் முடித்தார். காப்ப நடத்துக்குத்தக்கவாறு தாளம் ஒத்திட்டுத்தர என்றவாறு தாளத்தின் முதற்கூறுபாணி, இடைக்கூறு தூக்கு, இறுதிக்கூறு சீர் என்று கொள்க.


வினா 10. ஊழிக்கூத்து இவ்வளவு அருமையாகப் பாடப்பெற்றுள்ளதே அவசியம் அப்பாடலைப்படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.

விடை: நல்லந்துவனாரே நெய்தல் கலியில், “தொல்லூழித் தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால் பல்லியின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்” என்று பாடியுள்ளார்.


வினா 11. இதன் பொருள் எனக்கு விளங்கவில்லையே?

விடை: ஊழிக்காலம் தொன்மையானது, மாறி மாறி வரும், அயனாய் (பிரமா) இருந்து படைத்த இறைவனே ஊழிக்காலத்தில் அவ்வுயிர்னங்களைத்தன்பால் மீண்டும் ஒடுக்கிக் கொள்வான். அதுபோலச்சூரியன் காலையில் கதிர்களைப் பரப்பிப்பகலை உண்டாக்கினான். மாலையில் அச்சூரியனே கதிர்களைத்தன் பால் ஒடுக்கிக் கொண்டான். ஆதலால் மாலைக்காலம் ஆயிற்று என்பது பொருள்.


வினா 12. சங்க இலக்கியங்களில் வருகின்ற சைவத் தொடர்பான செய்திகளைக் கூறினூர்கள். அவையல்லாமல் வேறு நூல்களில் சைவத்தைப்பற்றிய செய்திகள் வருகின்றனவா?

விடை: சங்க இலக்கியங்களுக்கு முந்தியது தொல்காப்பியம். கி.மு 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. தமிழ் மொழியின் இலக்கணநூல். அதன் அமைப்பு, இலக்கணங்கள் கூறும்போது வரும் செய்திகள் சைவத் தொடர்புடையன.


வினா 13. தொல்காப்பியத்தின் அமைப்பே சைவத்தொடர்பு உடையதா? எவ்வாறு?

விடை: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று பாகுபாடுகளைக் கொண்டது.


வினா 14. திருக்குறளும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனமுப்பிரிவுகளை உடையதுதானே?

விடை: தமிழில் தான் முத்தமிழ், முந்நாடு, மூவேந்தர், மும்முரசு, முச்சுடர், மூன்றுவேளை, முக்கடவுளர் முதலியன உண்டு. சமயத்தில் முப்பொருள் உண்டு; மும்மலம் உண்டு. இவையெல்லாம் அடிப்படை எண்ணால் ஒப்புமை உடையன. தொல்காப்பியத்தின் இயல்பிரிவுகள் மிகச்சிறந்த சமயநோக்கு உடையன.


வினா 15. இயல்பிரிவுகளா? அவை என்ன?

விடை: எழுத்ததிகாரம் ஒன்பது இயல்களை உடையது. அதேபோலச் சொல்லதிகாரமும் பொருளதிகாரமும் ஒன்பது ஒன்பது இயல்களை உடையன.


வினா 16. ஒன்பது என்பதில் சமயநோக்கு என்ன?

விடை: ஒன்பது என்பதோடு எந்த எண்ணைக் கூட்டினாலும் கூட்டும் எண்ணே வரும் 9+2=11, 1+1=2; 9+3=12, 1+2=3; 9+4=13, 1+3=4; 9+5=14, 1+4=5; 9+6=15, 1+5=6; 9+7=16, 1+6=7; 9+8=17, 1+7=8 ஒன்பதுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் ஒன்பதே வரும் 9*2=18, 1+8=9; 9*3=27, 2+7=9, 9*4=36, 3+6=9; 9*5=45, 4+5=9; 9*6=54, 5+4=9; 9*7=63, 6+3=9; 9*8=72, 7+2=9; 9*9=81, 8+1=9.


வினா 17. இதற்கும் சமயத்திற்கும் என்ன தொடர்பு?

விடை: “ஒன்பது ஒன்பது யானை ஒளிகளிறு ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே ஒன்பதாமவை தீத் தொழிலின் உரை ஒன்பது ஒத்து நின்று என்னுள் ஒடுங்குமே” என்ற திருநாவுக்கரசரின் குறுந்தொகைப் பாடல் தெரியுமா?


வினா 18. பாடல் தெரியும், பாடலின் பொருள் புரியவில்லையே?

விடை: பொருளை நன்றாகக் கவனி. திருக்கோயில் அமைக்கும்போது 9 * 9 = 81 சதுரங்களாக அமைப்பார்கள். அதற்குப் பதவிந்யாசம் என்று பெயர். 81 சதுரங்களாகப் பகுத்து அப்பகுப்புக்களில் இந்த இந்தப்பகுப்புகளில் இந்த இந்தத்தெய்வத் திருவுருவங்களை வைக்க வேண்டும் என்ற முறைக்கேற்ப அமைப்பார்கள். அவ்வாறு அமைக்கும்போது இறைவியையும் இறைவனையும் உரிய இடங்களில் கருவறையில் வைப்பார்கள். அத்தகைய பகுதிகளில் பிடிபோன்ற உமாதேவியுடன் களிறுபோன்று வீற்றிருப்பான் என்பது முதல் அடியின் பொருள். ஒளிகளிறு – புகழ்மிக்க களிறு போன்ற இறைவன். பிங்களிறு என்று வந்ததால் முன் உள்ள யானை என்பது பிடியைச் சுட்டிற்று. இரண்டாம் அடியில் ஒன்பது ஒன்பது (9+9=18) பதினெட்டு என்னும் பல சிவகணங்கள் சூழ்ந்திருக்க. பதினெண் கணங்களும் ஏத்தவும் படுமே. புறநானூறு கடவுள் வாழ்த்து. பதினெண் கணங்களாவார்; தேவரும், அசுரரும், முனிவரும், கின்னரரும், கிம்புருடரும், கருடரும், இயக்கரும், இராக்கதரும், கந்தருவரும், சித்தரும், சரணரும், வித்தியாதரரும், நாகரும், பூதமும், வேதாளமும், தாராகணமும், ஆகாசவாசிகளும், போக பூமியோரும் என இவர். (பழையஉரை) உடலில் அழுக்குப்பொருந்திய ஒன்பது தூவாரங்கள் உள்ளன, தீயதன்மையான அழுக்கு உள்ள துவாரங்கள் ஒன்பதாம் என்பது மூன்றாம் அடியின் பொருள். “மலஞ்சோரும் ஒன்பது வாயிகுடிலை (சிவபுராணம்)” இவ்வாறு உரைக்கும் என்னுள் ஒன்பது ஒத்து நின்று ஒடுங்கும். பிடியும் களிறும் போன்று இறைவியும் இறைவனும் பதினெண் கணம் சூழவந்து அழுக்குப்பொருந்திய ஒன்பது தூவாரங்களையுடைய என் உடலின் உள்ளே ஒன்பது ஒத்து நின்று ஒடுங்குவர் என்று கூட்டிப்பொருள் செய்ய வேண்டும். ஒன்பது ஒத்து நின்ற ஒடுங்கல் – ஒன்பது என்ற எண்ணோடு கூட்டும் எண்ணாக வருதல் போல் இறைவனை எண்ணினாலும் பாச அறிவும் பசு அறிவும் நீங்காமல் நானாகவே உள்ளேன். அவன் இமைப்பொழுதும் நீங்காமல் திருத்தித்திருத்தி என் சிந்தை இடங்கொண்டிருப்பதால் ஒன்பதுடன் பெருக்கும்போது ஒன்பதாகவே ஆவதுபோல் சிவமாகவே ஆனேன். சிவமாக்கி எனையாண்ட – திருவாசகம். ஒன்பதுக்கு இத்தனை சிறப்பிருப்பதால் ஒன்பது என்ற பாகுபாட்டைப் பின்பற்றியுள்ளார்.


வினா 19. ஒன்பது என்று வருவது தத்துவ நோக்கு என்றால் திருமந்திரமும் ஒன்பது தந்திரங்களை உடையதுதானே?

விடை: திருமந்திரம் தத்துவ நூல் மட்டும் அன்று, தொல்காப்பியத்தை அடியொட்டியே அமைந்தது ஆகும். தொல்காப்பியம் ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டது. அடுத்த சங்க இலக்கியங்களில் ஒன்பது என்ற பிரிவை யாரும் பின்பற்றவில்லை. பத்து என்ற பிரிவை மேற்கொண்டனர். ஐங்குறுநூறு என்ற சங்க இலக்கியம் வேட்கைப்பத்து, வேழப்பத்து, அன்னைப்பத்து, கிள்ளைப்பத்து, பாசறைப்பத்து முதலிய பத்து என்ற பிரிவுகளை உடையது. பதிற்றுப்பத்து பத்துப்பத்துகளைக் கொண்டது. திருக்குறள், நாலடியார் முதலியவை பத்துக் கொண்ட அதிகாரங்களை உடையது. பிற்காலப் பக்தி இலக்கியங்களும் பத்து, பதிகம் என்ற பிரிவுகளைக் கொண்டவை. ஒன்பது என்ற பிரிவை யாருமே மேற்கொள்ளவில்லை. திருமூலர் மட்டும் தான் ஒன்பது என்ற பிரிவைப்பின்பற்றி ஒன்பது தந்திரமாக அமைத்தார்.


வினா 20. தொல்காப்பியத்துக்கும் திருமந்திரத்துக்கும் வேறு என்ன ஒற்றுமை?

விடை: திருமந்திரம் என்ற பெயரே தொல்காப்பியத்தையொட்டி அமைந்தது. “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப” என்பது தொல்காப்பியம். மாந்தர் மாந்திச் சொல்வது மந்திரம். பேராசிரியர் என்னும் உரையாசிரியர் இவை தமிழ் மந்திரம் என்று கூறுவார். மன் + திரம் = மந்திரம். சொல்லுவோனைக் காப்பது மந்திரம் என்பது வடமொழி. தமிழில் ஞானியர் ஆணையிட்டுச் சொன்னால் உடனே பயன் விளைவிப்பது மந்திரம். “பையவே சென்று பாண்டியர்க்கு ஆக” என்ற திருஞானசம்பந்தர் வாக்கு உடனே பலித்து. “கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே” என்ற சுந்தர மூர்த்திநாயனார் வாக்கு உடனே பெரும் பயனைத்தந்தது. திருமூலர், “சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே” என்பதைப்போலப் பல விடங்களில் ஆணையிட்டுக் கூறியுள்ளார். இந்திய மொழிகளிலேயே மந்திரம் என்ற பெயரோடு இருப்பது திருமந்திரம் ஒன்றுதான்.


வினா 21. இன்னும் ஏதாவது ஒற்றுமையுண்டா?

விடை: மிகுதியாக உள்ளன. ஒவ்வொன்றாகக் கூறுகிறேன். கேள். யாப்புவகையில் தொல்காப்பியம் சூத்திர யாப்பு, நூற்பா யாப்பு என்ற ஒரே வகையில் 1611 நூற்பாக்களும் அமைந்துள்ளன. திருமந்திரம் 3000 பாடல்களும், ஒரேவித யாப்பால் அமைந்த நூல் உலகமொழி எதிலும் இல்லை. சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், கந்தபுராணம் முதலியவை பல ஆயிரம் பாடல்களைக் கொண்டவை. எனினும் ஒரேவித யாப்பு அவற்றில் இல்லை. நான்குசீர், ஐந்துசீர், ஆறுசீர், எண்சீர் முதலியவற்றைக் கொண்ட அடிகளாக மாறிமாறிவரும். திருமந்திரம் அவ்வாறு இல்லை.


வினா 22. திருமந்திரம் யாப்பு எத்தகையது?

விடை: தொல்காப்பியர் அடிகளை எழுத்தெண்ணி வரையறை செய்துள்ளார். எழுத்தெண்ணி அமைக்கும் அடிக்குக் கட்டளை அடி என்று பெயர். 1. குறளடி: நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து ஆகியவற்றைக் கொண்டு வருவது குறளடியாகும். பிற்காலத்தில் இருசீர்களைக் கொண்டுவருவது குறளடி எனவாயிற்று. “கருவார் கச்சித் திருவேகம் பத்(து) ஒருவா என்ன மருவா வினையே” – இது குறளடி 2. சிந்தடி: ஏழ் எழுத்து, எட்டு எழுத்து, ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு வருவது சிந்தடி என்பது தொல்காப்பியர் கருத்து. பிற்காலத்தில் மூச்சீரடி, சிந்தடி என வழங்கலாயிற்று “சீலம துடையவர் திருவே 3. அளவடி: பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு எழுத்துக்களைக் கொண்டு வருவது அளவடி என்பது தொல்காப்பியர் கருத்து. பிற்காலத்தில் நாற்சீரடி அளவடி எனப்பெற்றது. “சிவசிவ எங்கிலார் தீவினை யாளர்” . .4. நெடிலடி: பதினைந்து, பதினாறு, பதினேழு எழுத்துக்களைக் கொண்டுவருவது நெடிலடி என்பது தொல்காப்பியர் கருத்து. பிற்காலத்தில் ஐந்து சீரடி நெடிலடி எனப்பெற்றது. “சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்” . .5. கழிநெடிலடி: பதினெட்டு, பத்தொன்பது, இருபது எழுத்துக்களைக் கொண்டு வருவது கழிநெடிலடி என்பது தொல்காப்பியர் கருத்து. ஆறுசீர்க்கழிநெடிலடி, ஏழுசீர்க்கழிநெடிலடி, எண்சீர்க்கழிநெடிலடி எனச்சீர்களை வைத்துக்கூறுவது பிற்காலமரபு. “மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்படமானி”.


வினா 23. திருமந்திரம் இவற்றுள் எதனைச்சாரும்?

விடை: திருமந்திரப்பாடல் ஒவ்வொரு அடியும் பன்னிரண்டு எழுத்துக்களைக்கொண்டது. பன்னிரண்டு எழுத்துக்களைக்கொண்ட அளவடி என்னும் கட்டளை அடியால் அமைந்தது.


வினா 24. எல்லாப்பாடல்களும் அவ்வாறு அமைந்தனவா?

விடை: எல்லாப் பாடல்களும் அவ்வாறு அமைந்தனவே. எழுத்து எண்ணும்போது மெய் எழுத்துகளை விட்டே எண்ணவேண்டும். திருமந்திரம் 3000 பாடல்களும் இவ்வாறு கட்டளையடியால் அமைந்தனவே.


வினா 25. பன்னிரண்டு எழுத்துக்களால் ஒவ்வொரு அடியும் அமைவதில் ஏதாவது சிறப்பு உண்டா?

விடை: பன்னிரண்டு தமிழுக்கே உரிய தனிச்சிறப்பு. தமிழ் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, ஓராண்டுக்கு மாதம் பன்னிரண்டு, இராசிபன்னிரண்டு, திருமுறை பன்னிரண்டு, சீர்காழிக்குப்பெயர் பன்னிரண்டு, இந்தியாவில் உள்ள சோதிலிங்கங்கள் பன்னிரண்டு, சிவஞானபோதம் நூற்பா பன்னிரண்டு, சூரியன் பன்னிருவர், முருகப் பெருமானுக்குக் கண், செவி, கைகள் பன்னிரண்டு. ஆதலால் திருமந்திரப்பாடல்கள் ஒவ்வொரு அடியும் பன்னிரண்டு எழுத்துக்களால் ஆனவையாகும்.


வினா 26. இன்னும் தொல்காப்பியத்துக்கும் திருமந்திரத்துக்கும் ஒற்றுமையுண்டோ?

விடை: பக்திநூல்கள் எதிலும் பாயிரம் இல்லை. தொல்காப்பியத்தை ஒட்டித் திருமந்திரத்திலும் பாயிரம் அமைந்தது. கடவுள் வாழ்த்து, அவையடக்கம் முதலியனவும் தொல்காப்பியத்தாக்கமே.


Back to Top