சைவ பொது வினா விடை - FAQ - General Topics


1 . கடவுள் இயல்


வினா 1: உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?

விடை: சிவபெருமான்

வினா 2: சிவபெருமான் எப்படிப் பட்டவர்:

விடை: என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

வினா 3: சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?

விடை: படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.

வினா 4: சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்வார்?

விடை: தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

வினா 5: சத்தி என்னும் சொல்லுக்கு பொருள் யாது?

விடை: ஆற்றல்

வினா 6: சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?

விடை: உமாதேவியார்.

வினா 7: சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மை இடம் யாது?

விடை: திருக்கயிலை மலை.

வினா 8: சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்?

விடை: சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்திலும் நின்று அருள் செய்வார்.


2 . நன்மை தீமை இயல்


வினா 9: சிவபெருமான் உயிர்களுக்காக அருளிச் செய்த நூல்கள் யாவை?

விடை: பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும், தமிழ் மொழிப் புராணங்களும் என மூன்றுமாம்.

வினா 10: இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?

விடை: சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.

வினா 11: சிவ புண்ணியம் யாது?

விடை: சிவமே முதல் எனச் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும்.

வினா 12: உயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது?

விடை: 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் என்பன.

வினா 13: புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

விடை: சிவபுண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ (உயிர்) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.

வினா 14: பாவங்கள் ஆவன யாவை?

விடை: கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊன் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல்.

வினா 15: பாவங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

விடை: நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர்.


3 . திருநீற்று இயல்


வினா 16: சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது?

விடை: சித்தாந்த சைவம்.

வினா 17: சைவ சமயவாதிகள் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

விடை: திருநீறு

வினா 18: திருநீறாவது யாது?

விடை: பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுவதால் உண்டாகிய திருநீறு.

வினா 19: எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

விடை: வெள்ளை நிறத் திருநீறு.

வினா 20: திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

விடை: பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணியலாம்.

வினா 21: திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

விடை: வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ இருந்து அணியலாம்.

வினா 22: திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

விடை: நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து சிவ சிவ (ஐந்தெழுத்து) என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

வினா 23: திருநீறு நிலத்தில் சிந்தினால் என்ன செய்ய வேண்டும்?

விடை: சிந்திய திருநீற்றினை எடுத்து விட்டு, அந்த இடத்தைத் தூய்மை செய்ய வேண்டும்.

வினா 24: திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ பூசலாமா?

விடை: கூடாது.

வினா 25: திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

விடை: தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் விளக்கிய உடனும், சூரியன் தோன்றி மறையும் போதும், குளித்த உடனும், உணவு உண்ணும் போதும், உண்ட பிறகும் திருநீறு அணிய வேண்டும்.

வினா 26: ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

விடை: விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

வினா 27: கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

விடை: முகத்தைத் திருப்பி நின்று அணிய வேண்டும்.

வினா 28: திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

விடை: இரண்டு வகைப்படும், அவை: 1.நீர் கலவாது பொடியாக அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக (திரி புண்டரம்) அணிதல்.

வினா 29: முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

விடை: தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

வினா 30: முக்குறியாக அணியும்போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

விடை: இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதில் கூடினாலும் குறைந்தாலும் குற்றமாகும்.

வினா 31: மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

விடை: அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

வினா 32: மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

விடை: ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

வினா 33: முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

விடை: ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.


4 . சிவ மூலமந்திர இயல் (திருவைந்தெழுத்து)


வினா 34: சைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது?

விடை: திருவைந்தெழுத்து

வினா 35: திருவைந்தெழுத்தைக் கணித்தற்குத் தகுதி உடையவர் யாவர்?

விடை: மது அருந்தாதவர், ஊண் உணவு உண்ணாதவர், ஒழுக்கம் உடையவர், சமய தீக்கை பெற்றவர்.

வினா 36: திருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாக கணிக்க வேண்டும்?

விடை: நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.

வினா 37: எந்த திக்கு முகமாக இருந்து கணிக்க வேண்டும்?

விடை: கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ இருந்து கணிக்க வேண்டும்.

வினா 38: எப்படி இருந்து கணிக்க வேண்டும்?

விடை: முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத் தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு கணிக்க வேண்டும்.

வினா 39: எப்படிக் கணிக்கலாகாது?

விடை: சட்டை இட்டுக் கொண்டும், தலையில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டும் கணித்தல் ஆகாது.

வினா 40: திருவைந்தெழுத்தைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்?

விடை: மனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.

வினா 41: நிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்?

விடை: உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.


5 . உருத்திராக்க இயல்


வினா 42: உருத்திராக்கமாவது யாது?

விடை: தேவர்கள் திரிபுரத்து அசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பம் செய்து கொண்ட பொழுது, திருக்கயிலை உடையாரின் மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரில் தோன்றிய மணியாம்.

வினா 43: உருத்திராக்கம் அணிவதற்குத் தகுதியானவர் யார்?

விடை: மதுபானமும், ஊண் உணவும் இல்லாதவராய், ஒழுக்கம் உடையவராய் உள்ளவர்.

வினா 44: உருத்திராக்கம் தரித்துக் கொண்டு மதுபானம், ஊண் உணவு முதலியவை செய்தவர் யாது பெறுவர்?

விடை: தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அனுபவிப்பர்.

வினா 45: குளிக்கம் காலத்தில் உருத்திராட்சத்தை அணியக் கூடாது?

விடை: அணியலாம். குளிக்கும் பொழுது உருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கை நீருக்குச் சமமாகும்.

வினா 46: உருத்திராட்சத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?

விடை: ஒருமுக மணி முதல் பதினாறு முகமணி வரையும் உண்டு.

வினா 47: உருத்திராட்ச மணியை எப்படிக் கோத்துத் தரித்தல் வேண்டும்?

விடை: பொன்னிலாயினும், வெள்ளியிலாயினும், தாமிரத்தாலாயினும், முத்தாயினும், பவளாமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு, முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும்.

வினா 48: உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?

விடை: குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள் என்பவைகளாம்.

வினா 49: இன்ன இன்ன இடங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் முறை உண்டோ?

விடை: ஆம். தலையிலே இருபத்தி இரண்டும் மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணியும், கழுத்திலே முப்பத்தி இரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும்.

வினா 50: இந்த இடங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்கம் தரித்துக் கொள்ளலாமா?

விடை: காதுகளில் எப்போது தரித்துக் கொள்ளலாம். மற்றை இடங்களில் எனில், தூக்கத்திலும் மலசலம் கழிக்கும் போதும், நோயிலும் அணிந்து கொள்ளலாகாது.

வினா 51: உருத்திராக்கம் அணிவது எதற்கு அறிகுறி?

விடை: சிவபெருமானுடைய திருக்கண்ணில் தோன்றும் திருவருட் பேற்றிக்கு அறிகுறி.


6 . திருக்கோயில் வழிபாடு இயல்


வினா 52: திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?

விடை: குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் செல்லல் வேண்டும்.

வினா 53: திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் யாது செய்தல் வேண்டும்?

விடை: தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ்பாடிக் கொண்டு உள்ளே புகுதல் வேண்டும்.

வினா 54: திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?

விடை: பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.

வினா 55: தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்த திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?

விடை: கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.

வினா 56: எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்க கூடாது?

விடை: கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.

வினா 57: ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?

விடை: எட்டு உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.

வினா 58: எட்டு உறுப்பு வணக்கமாவது யாது?

விடை: தலை, கை இரண்டு, செவி இரண்டும், மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.

வினா 59: பெண்டிர் எப்படி வணங்க வேண்டும்?

விடை: ஐந்து உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.

வினா 60: ஐந்து உறுப்பு வணக்கமாவது யாது?

விடை: தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்றும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.

வினா 61: எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?

விடை: மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்குதல் குற்றம்.

வினா 62: விழுந்து வணங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?

விடை: திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.

வினா 63: எவ்வாறு வலம் வரல் வேண்டும்?

விடை: இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து வலம் வரல் வேண்டும்.

வினா 64: எத்தனை முறை வலம் வரல் வேண்டும்?

விடை: மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.

வினா 65: திருக்கோயிலில் எந்த முறையாக வழிபாடு செய்ய வேண்டும்?

விடை: முதலில் விநாயகரை வழிபட்டுப் பின் பெருமானையும் உமையம்மையையும் வழிபாடு செய்து, திருநீறு வாங்கிக் கொண்டு அதன்பின் அம்பலவாணர், தென்முகப் பரமன், சேயிடைச் செல்வர், பிறைமுடிப் பெருமான், முருகப் பெருமான் முதலிய திருமேனிகளை வழிபட வேண்டும்.

வினா 66: விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?

விடை: முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக் காதையும் வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.

வினா 67: திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?

விடை: இரண்டு கைகளையும் தலையிலோ, மார்பிலோ குவித்துக் கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்தல் வேண்டும்.

வினா 68: எந்த காலத்தில் வழிபாடு செய்தல் கூடாது?

விடை: திருமஞ்சனம், அமுது செய்த்தல் காலங்களில் வழிபாடு செய்தல் கூடாது.

வினா 69: திருமஞ்சன (அபிடேக) நேரத்தில் திருச்சுற்றினை வலம் வரலாமா?

விடை: உள் திருச்சுற்றினை வலம் வரல் ஆகாது.

வினா 70: வழிபாடு முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

விடை: இறைவன் முன்னர்ச் சென்று விழுந்து வணங்கித் திருவைந்தெழுத்தை இயன்றவரை கணித்து எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.


7 . உயிர் இயல்8 . தளை இயல்


Back to Top