lingam siva

சைவ பொது வினா விடை


கடவுள் இயல்


1. உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?

சிவபெருமான்


2. சிவபெருமான் எப்படிப் பட்டவர்:

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.


3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.


4. சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்வார்?

தமது சத்தியைக் கொண்டு செய்வார்.


5. சத்தி என்னும் சொல்லுக்கு பொருள் யாது?

ஆற்றல்


6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?

உமாதேவியார்.


7. சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மை இடம் யாது?

திருக்கயிலை மலை.


8. சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்?

சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்திலும் நின்று அருள் செய்வார்.


நன்மை தீமை இயல்


9. சிவபெருமான் உயிர்களுக்காக அருளிச் செய்த நூல்கள் யாவை?

பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும், தமிழ் மொழிப் புராணங்களும் என மூன்றுமாம்.


10. இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?

சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.


11. சிவ புண்ணியம் யாது?

சிவமே முதல் எனச் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும்.


12. உயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது?

1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் என்பன.


13. புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

சிவபுண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ (உயிர்) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.


14. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊன் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல்.


15. பாவங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர்.


திருநீற்று இயல்



16. சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது?

சித்தாந்த சைவம்.


17. சைவ சமயவாதிகள் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

திருநீறு


18. திருநீறாவது யாது?

பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுவதால் உண்டாகிய திருநீறு.


19. எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

வெள்ளை நிறத் திருநீறு.


20. திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணியலாம்.


21. திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ இருந்து அணியலாம்.


22. திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து சிவ சிவ (ஐந்தெழுத்து) என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.


23. திருநீறு நிலத்தில் சிந்தினால் என்ன செய்ய வேண்டும்?

சிந்திய திருநீற்றினை எடுத்து விட்டு, அந்த இடத்தைத் தூய்மை செய்ய வேண்டும்.


24. திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ பூசலாமா?

கூடாது.


25. திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் விளக்கிய உடனும், சூரியன் தோன்றி மறையும் போதும், குளித்த உடனும், உணவு உண்ணும் போதும், உண்ட பிறகும் திருநீறு அணிய வேண்டும்.


26. ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.


27. கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

முகத்தைத் திருப்பி நின்று அணிய வேண்டும்.


28. திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும், அவை: 1.நீர் கலவாது பொடியாக அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக (திரி புண்டரம்) அணிதல்.


29. முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.


30. முக்குறியாக அணியும்போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதில் கூடினாலும் குறைந்தாலும் குற்றமாகும்.


31. மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.


32. மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.


33. முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.