lingam siva

 

 

 

 

வட்டணைகள் படநடந்த நாயனார்


—  புலவர். நா. தியாகராசன், திருவலம்புரம் - பூம்புகார்


திருவலம்புரம் காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில், காவிரியின் தென்கரையில் (வலப்புறம்) அமைந்துள்ளது. இன்று மேலப்பெரும்பள்ளம் என்று வழக்கில் உள்ளது. சிவபெருமானின் மூர்த்தங்கள் அறுபத்து நான்கனுள் ஒன்று பிச்சாடனர் திருக்கோலம். ஆகமத்தில் இத்திருக்கோலம் எவ்வாறு அமையவேண்டும் என்னும் விதி உண்டு. அதன்படி துடி கொட்டியும், கபாலம் ஏந்தியும், திரிசூலம் தாங்கியும், நீள் முடியும், அரையில் நாகாபரணமும், நிர்வாணநிலையும், பாத அணியுடனும் அமைந்த திருக்கோலங்கள் செப்புப்படி மங்களாகவும், கற்சிற்பங்களாகவும் அழகுற வடிக்கப் பெற்றுள்ளன. இவ்வாறாக வழுவூர் வீரட்டாணம், திருச்சி தாயுமானவர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவெண்காடு முதலிய திருக்கோயில்களில் உள்ள செப்புத் திருமேனிகளையும், சிதம்பரம், தாராசுரம், குத்தாலம் ஆகிய கோயில்களில் உள்ள கற்படிமங்களையும் சான்றாகக் காணலாம்.

இவற்றுக்கு முற்றிலும் மாறாகச் சிற்ப, ஆகம நூல்களில் காணப்பெறாத வகையில் அப்பர் பெருமானின் திருவலம்புரத் தேவாரத்தில் உள்ள திருத்தாண்டகப் பாடல்களையே தியான சுலோகமாகக் கொண்டு வடிக்கப்பெற்றது வட்டணைகள் படநடந்த நாயனார் திருமேனியாகும். வீணை ஏந்திய நிலையில் பிச்சாடனர் படிமம் அமைத்தற்குரிய மூலம் ஆகமங்களில் காணப்பெறவில்லை என்பது கம்பன் அடிப்பொடி. சா. கணேசன் அவர்களின் கருத்தாகும். (I Conographic Concepts International Conference – Kolalumpur 1996)

     “கறுத்ததொரு கண்டத்தர் காலன்வீழக்
      காலினால் காய்ந்துகந்த காபாலியார்
      முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
      முனிகணங்கள் புடைசூழ முற்றந்தோறும்
      தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
      சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
      மறித்தொருகால் நோக்காதே மாயம்பேசி
      வலம்புரமே புக்கங்கே மன்னினாரே”
 தேவாரம் 6.58.6

என்பது உழவாரப்படையாளி உரைத்த திருப்பாடல்.

நீலகண்டத்தர், காலனை உதைத்து அழித்தவர். தோலை ஆடையாகக் கொண்டவர். வெண்ணீறணிந்தவர், முனிவர் புடைசூழக் கையில் வீணை ஏந்தியவராய்ச் சிறிதே புன்முறுவல் காட்டிச் சிந்தையைக் கவர்ந்தவர். மாயச் சொற்களால் மயங்குமாறு செய்தவர். அவர்தான் வலம்புரம் புக்கு மகிழ்ந்திருப்பவர் என்பதே பாடலின் கருத்து.

தெறித்ததொரு வீணையராய் எழுதாப் பேரழகோடு வீணையை மீட்டும் பாவத்தில் வீக்கின நரம்பை அகவிரலாலும், புறவிரலாலும் வருடிய நிலையை, விரல் தெரிப்பில் காட்டியுள்ள நளினத்தைச் சிற்பி அழகுற அமைத்துள்ளான். தெறித்ததொரு வீணையராய் முனிகணங்கள் புடைசூழ முற்றந்தோறும் செல்பவரின் வாய்ச்சிறுமுறுவலைக் காட்டியுள்ள அழகோ உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. படிமத்தில் ஒளிகாலும் முகப்பொலிவு கண்டு ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகு என்று வியக்கச் செய்கிறது.

இவ்வாறு தன் அழகைக் காட்டித் தலைவியின் அறிவை மயக்கிய அண்ணல் அவள் ஆவி போம்படி செய்த செயல்களை வேறொரு பாடலின் அப்பர் பெருமான் அழகுற வடித்துக்காட்டுகிறார்.

     “பட்டுடுத்துப் பவளம்போல் மேனியெல்லாம்
      பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம்நோவ
      இட்டெடுத்து நடமாடி இங்கே வந்தார்க்கு
      எவ்வூரீர் எம்பெருமான் என்றேன் ஆவி
      விட்டிடுமாறு அதுசெய்து விரைந்து நோக்கி
      வேறோர் பதிபுகப் போவார்போல
      வட்டணைகள் படநடந்து மாயம்பேசி
      வலம்புரமே புக்கங்கே மன்னினாரே”
 தேவாரம் 6.58.7

இறைவன் வட்டணைகள் படநடந்து, மயக்கம்தரும் சொற்களைப் பேசி வலம்புரக் கோயில் புகுந்து நிலைபெற்றிருந்தார் என்றார் அப்பர் பெருமான். இறைவர் தம் திருவடிகள் நிலம்தோய நடந்துவந்த காட்சியை அப்பர் பெருமான் கண்டவாறே சிற்பியும் உணர்கிறான். அதற்கேற்பத்தான் வடித்த சிலையில் இயல்பாக நடப்பதுபோல் இடக்கால் ஊன்றி நிற்கவும், வலக்கால் அடிபெயர்த்து நடந்து வருகிற உணர்வினை வெளிபடுத்துவான் வேண்டிக் காலணியின் முன்பாகம் நிலத்தில் பதிந்திருக்கப் பின்பாகம் தூக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. இறைவனின் பாதம் முன்பகுதி காலணியில் பதிந்திருக்கப் பின்குதிகால் தூக்கிய நிலையில் உள்ளது. இவ்வாறாக நிலத்திற்கும் பாத அணிக்கும் இடைவெளியைக் காட்டி, மேலும் பின்குதிகால் பாதஅணியில் பதியாது சற்றே இடைவெளியைக் காட்டிக் கம்பீரமாய் நடந்து வருவது போல் அமைந்துள்ள பாங்கும், இட்ட அடிசற்றே பெயர்ந்து நிற்கும் நிலையில் திருமேனி அமைந்திருப்பதும், பாதம் நோவ இட்டெடுத்து நடமாடி இங்கே வந்தார்க்கு என்ற வரிக்கு விளக்கமாக அமைந்துள்ளமை கண்டு மகிழலாம்.

\

வட்டணைகள் பலநடந்து என்றதில் வட்டணை என்றதற்கு விரிந்த பொருள்காண வேண்டும். இதற்குப் பல பொருள்களுண்டு. வட்டணை-தாளம், இங்கு ஓசை என்று காசிமடத்துப் பதிப்பிலும், வட்டணைகள் பட- சுழற்சி தோன்ற என்று தருமபுரத்துப் பதிப்பிலும் அடிக்குறிப்பாகத் தந்துள்ளனர்.

இசைத்துறையிலும் இதற்கு விரிவான பொருளுண்டு. ஆதிதாளம் எட்டு எண்ணிக்கை கொண்டது. அது ஒரு வட்டணையாகிறது என்று விளக்கப்படுகிறது. தாளவட்டணை – தாளம் வட்டமடித்து (வட்டணையாக) மீண்டும் மீண்டும் வருதல் வட்டணை எனப்படும். இங்கு விரைந்த நடை, மயங்கச் செய்கிற நடை, பெருமித மகிழ்ச்சியில் வலம்வருதல் எனப்பொருள்கொள்ளவேண்டும்.

மேலும் எல்லாப் படிமங்களிலும் அமைந்துள்ளது போலவே இறைவனின் இடப்புறத்தில் பெரியதாலம் (தட்டு) ஏந்திய நிலையில் குள்ளப்பூதமும், வலப்புறத்தில் உயிரின் சின்னமாக மானும் விளங்குகின்றன. இறைவன் கொடுக்கும் புல்லை மான் உண்பது போல முன்னங்கால்களைத் தூக்கிய நிலையில் வடிவமைக்கப் பெற்றுள்ளது. மானின் வாய்க்கும், இறைவனின் விரலுக்கும் நுண்ணிய இடைவெளியே உள்ளது. மான் இறைவனின் விரல் நுனியை நுகர்ந்த நிலையில் அமைக்கப் பெற்றுள்ளது. இறைவன் உயிர்களுக்கு அருளைக் கொடுப்பதும், அவ்வருளைப் பெற்ற உயிர்கள் இறைவனை அடைவதையும் இது உணர்த்துகிறது.

அப்பர் பெருமான் திருக்கடவூரில் வழிபட்டபின் ஆக்கூர் செல்ல விரும்புகிறார். அப்போது கட்டிளங்காளையாக வந்து தாமும் ஆக்கூர் வருவதாகச் சொல்லி மாயம்பேசி, வாவா என பூதம் புடைசூழ விரைந்த நடையினராய், வயல்வளமும், மதி தவழும் மாடவீதியும், வங்கக்கடல் ஓரம் அமைந்ததுமான வலம்புரம் புகுந்து மறைந்தார் ஏறூர்ந்த செல்வர்.

இவ்வாறாகத் திருவிளையாடல் செய்த பெருமான் அப்பர் உள்ளத்தில் அன்று முழுதும் பிச்சாடதேவராகவே வலம்வந்த காட்சிதான் திருத்தாண்டகப் பாடல்களாக மலர்ச்சியுற்றன. “அப்பர் கண்ட மானதக் காட்சியில் முற்றந்தோறும் தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் என்பதும் இட்டெடுத்து நடமாடி வந்ததும், வட்டணைகள் படநடந்து மாயம் பேசியதுமே சிற்பியின் கலை உணர்வுக்கு மூலமாய் அமைந்து ஆகம விதிக்கு வேறாகப் புதியதொரு கலைவடிவம் கிடைத்தது கண்டு மகிழ்வோமாக!”

குறிப்பு:இத்தகைய சிறப்புமிக்க திருவலம்புரம் வட்டணைகள் படநடந்த நாயனாருக்கு, இத்திருவள்ளுவராண்டு 2044 வைகாசித்திங்கள் 16ம் நாள் (30-05-13) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, எம் மன்றத்தின் சார்பில் அபிடேகம், அலங்காரம், மலர்வழிபாடு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் முதலியன மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நல்ல நிகழ்விற்கு தஞ்சை திருப்பூந்துருத்தி திருநாவுக்கரசர் திருமடம் அப்பர்அடிப்பொடி துறவி கணேசனார், பூம்புகார் வரலாற்று அறிஞர், மாதவி மன்றத்தின் செயலர் திரு. புலவர். நா. தியாகராசன், பேராசிரியர் திரு. தா. தியாகராசன் ஆகிய சான்றோர்கள் முன்னிலை வகித்தனர். சித்தாந்தச் செம்மணி முனைவர். அ. மா. இலட்சுமிபதிராசு அவர்களின் வழிகாட்டுதலின் படி, எம் மன்றத் தொண்டர்கள் இவ்வழிபாட்டிலே திருமுறைவிண்ணப்பம் செய்து நல்விழாப் பொலிவு கண்டு மகிழ்ந்தனர்.

வட்டணைகள் படநடந்த நாயனார்

நாகை மாவட்டம், பூம்புகார், மேலப்பெரும்பள்ளம்

(குறிப்பு: மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் கருவி என்ற பகுதி அடுத்து காவிரியின் கடைமடையில் இருந்து 2. கி.மீ. தொலைவில் உள்ளது.)

 

© 2010 Manivasagar Arutpani Mandram, TamilNadu, India. | All rights reserved.