lingam siva

 

 

 

 

உழவாரப் படையாளியின் உண்மைத் தொண்டர் ‘துறவி கணேசனார்’


—  முனைவர் அ.மா.இலட்சுமிபதிராசு


குழந்தைகள்பால் பேரன்பு, பண்பட்ட உள்ளம், அறத்தில் வழுவாத நிலை, சைவத்தின் மேல் சமயம் வேறில்லை என்னும் நம்பிக்கை, மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் ஒளிமுகம், ‘அப்பர் பெருமானே தம் அருட்குரு’ என வாழும் இக்கால அப்பூதியார் யார் இவர்?

அவரே “துறவி கணேசனார்”.

1997 ஆம் ஆண்டு விசுவநாதர் அருள்புரியும் காசிமாநகரில் இவரது அருள் வாழ்வு தொடங்கியது. காசி குமாரசாமி மடத்தில் (குமரகுருபரர் அமைத்தது) பலமாதம் தங்கியிருந்தார்.

கேதார்காட் கேதாரீசுவரர் திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்தார். அங்கிருந்து திருமிகு. பாலசுப்பிரமணியன் என்பாரின் உதவியுடன் பத்ரிநாத், கேதார்நாத், இருடிகேசம், அரித்துவார் முதலிய புனிதத் தலங்களுக்குச் சென்று ஒருமாதம் தங்கியிருந்து சிவபரம்பொருளின் அருளினைப் பெற்றார்.

அரித்துவாரில் தங்கியிருந்த போது இவருடன் நட்புக் கொண்டவர் திரு. பாண்டியன் என்பவர். துறவியாரின் பூர்வாசிரம வாழ்வைக் கேட்டறிந்தார். 1995 ஆம் ஆண்டில் துறவியார் தரணிபோற்றும் தஞ்சை மாநகரில் குடியிருந்தார். துறவியார் தஞ்சையில் இருப்பதை அறிந்த பாண்டியன் திருப்பூந்துருத்தி அப்பரடிகள் திருமடம் தெரியுமா? எனக்கேட்ட போது துறவியார் ‘தெரியாது’ எனக் கூறினார். பூந்துருத்தி அப்பர் மடம் தெரியாமல் தஞ்சையில் வாழ்வது அவமானம் என்றார் பாண்டியன். அது அப்பர் கூறியதாகவே துறவியாருக்குத் தோன்றியது. காசி மடத்திற்கு மீண்டும் திரும்பி வந்து தம் திருப்பணியைத் தொடர்ந்தார். கடும் உழைப்புக் காரணமாக உடல்நலம் பாதிப்படைந்தது.

காசியிலிருந்து தஞ்சைக்கு வந்து சேர்ந்தார். திருப்பூந்துருத்திக்குச் சென்றார்.

     “புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் தன்னை
      பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன் நானே”

என்று அப்பர் பெருமான் கண்ட அந்நிலையில் தாமும் நின்று கண்ணீர் சொரிந்து வணங்கித் துதித்தார். அப்பர் பெருமான் அமைத்த திருமடத்தையும் கண்டு வணங்கி, அது இருந்த நிலையால் மனம் கலங்கி, வருந்தி மீண்டார். திருவையாறு அறுபத்து மூவர் திருமடத்தில் தங்கிச் சைவப்பணி புரிந்தார்.

திருவையாற்றுக்கு அருகில் அமைந்திருந்த அழகுமிகு சிற்றூர் வளப்பக்குடி. அங்கு மிகப்பழங்காலத்திலேயே ஊர் மக்களால் அப்பர் திருமடம் ஒன்று அமைக்கப் பெற்றிருந்தது. அவ்வூருக்குத் துறவியார் 1998-இல் சென்றார். காலவெள்ளத்தால் சிதைந்திருந்த அத்திருமடத்தைத் தமது சொந்தப் பணம் ரூ 1,00,000 கொண்டு செம்மையாக்கினார்.

மேலும் அவ்வூரில் பள்ளி இல்லாதிருந்த நிலைகண்டு வருந்தினார். “கேதாரீசுவரர் நர்சரிப்பள்ளி” என்னும் குழந்தைகள் பள்ளியைத் தொடங்கினார். 60 குழந்தைகள் அப்பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றனர். குழந்தைகளுக்கு இலவசச் சீருடைகள் வழங்கினார்.

வளப்பக்குடி அப்பர் திருமடத்தில் இருந்தாலும்

“பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
      அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே”

என்னும் அப்பர் பெருமானின் தேவாரச் சிந்தனையே தலைநின்றது.

திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ளது. மதுரையில் சைவத்தை நிலைநாட்டிய திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டிலிருந்து அப்பர் பெருமானைக் காணத் திருப்பூந்துருத்திக்கு விரைந்தார். அவரை எதிர்கொள்ள 2 கல் தொலைவில் உள்ள வெள்ளாம்பிரம்பூர் சென்றார். அங்கிருந்து திருஞானசம்பந்தரின் சிவிகையைச் சுமந்தார். சற்றுநேரத்தில் ஞானசம்பந்தப் பெருமான் “அப்பர் எங்குற்றார்” என வினவ அப்பர் பெருமான் “நும்மடி தாங்கி வரும் பெருவாழ்வு பெற்று இங்குற்றேன்” என்றார். சிவிகையை விட்டுக் கீழே குதித்த ஞானசம்பந்தர் அப்பரை வீழ்ந்து வணங்க, அப்பரும் கீழே வீழ்ந்து வணங்கினார். அவ்விடம் இன்றும் “சம்பந்தர்மேடு” என்னும் பெயரால் வழங்கப்பெறுகிறது.

அங்கிருந்து திருஞானசம்பந்தர், அப்பருடன் நடந்தே திருப்பூந்துருத்திக்கு எழுந்தருளினார். வரும் வழியில் திருவாலம்பொழில் இறைவனைச் செந்தமிழ்ப் பதிகம் பாடித் துதித்தார்.

“பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன்” என்றும், “அழகாலமைந்த உருவுடை மங்கை” என்றும் அப்பர் பெருமான் அப்பனையும், அம்மையையும் பாடிய தலம் திருப்பூந்துருத்தி. அதனால் இறைவன் பொய்யிலியப்பர், இறைவன் அழகாலமர்ந்த நாயகி எனப்படுகின்றனர்.

இத்திருத்தலத்தில் அப்பர் உழவாரப்பணி செய்திருந்தமையை அறிந்து அவ்விடத்தை மிதிக்க அஞ்சிய திருஞானசம்பந்தர் கோபுரத்திற்கு வெளியே நின்று வழிபட்டார். எதிரே நந்திதேவர் இருந்தமையால் இறைவனை வழிபட இயலவில்லை. இறைவன் நந்திதேவரை விலக ஆணையிட்டார். சம்பந்தர் இறைவனை வழிபட்டு அப்பருடன் திருமடத்திற்கு எழுந்தருளினார்.

அப்பர் பெருமான் இத்திருமடத்தில்தான் திருவங்கமாலை, தனித்திருத்தாண்டகம் முதலிய பதிகங்களை அருளினார். இத்திருமடத்தைச் சேக்கிழார் பெருமான், “திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் அங்கொன்று செய்தார்” என்று பெரியபுராணத்தில் குறித்துள்ளார். நாளடைவில் இத்திருமடம் பேணுவார் இன்றிச் சீர் குன்றியது.

பெரியபுராணப் பேருரை வரைந்த சிவக்கவிமணி அவர்கள் இத்திருமடத்தின் நிலைகுறித்து மிகவும் வருந்தி எழுதியுள்ளார். “தனிச் சிறப்பு வாய்ந்த இத்திருமடம் இந்நாளில் இடிந்து சுவர்கள் மட்டும் காண உள்ள காட்சி மிக வருந்தத்தக்கது. இத்திருமடத்தின் சுவர், பூசைமேடை முதலிய திரு அடையாளங்களைப் பொன்னே போல் பாதுகாத்து வழிபடுவதற்குரிய சிறந்த இடமாக அமைத்து வைக்க வேண்டியது சைவ நன்மக்களது பெருங்கடமை. அது பெரும் சிவபுண்ணியமுமாம். இத்திருமடத்தில் சிதைந்து கிடக்கக் காணும் ஒவ்வொரு சிறிய செங்கல் துண்டுகளும் பலப்பல கோடி பொன்விலை பெறும் சிறந்த தெய்வ மதிப்புடையவை” என்று சிவக்கவிமணியார் எழுதியுள்ளமை குறிக்கத்தக்கது. (பேரூரில் உள்ள சிவக்கவிமணியின் சமாதியில் இத்திருமடத்தின் இரு செங்கட்கள் அவரின் விருப்பத்தின்படி பதிக்கப் பெற்றுள்ளதும் அறிய வேண்டிய செய்தியாகும்) 1943 ஆம் ஆண்டு சிவக்கவிமணி திருமடம் குறித்து எழுதினார்.

1966-இல் தஞ்சை வெற்றிவேல் அச்சக உரிமையாளர் தெய்வத்திருமகன் கே.வி. பக்கிரிசாமிப்பிள்ளை அவர்கள் பெரிதும் முயன்று திருப்பணி தொடங்கினார். ஆக்கிரமிப்பாளர் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். “அப்பர் மடம் அப்பருக்கே” என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் எனச் சேக்கிழார் பெருமான் குறித்தமையால் திருமடத்தின் நடுக்கூடத்தின் மேற்பகுதியில் திங்களும் ஞாயிறுமாக மாறிமாறி சுதையால் அமைத்தார். திருமடத்தைப் பொலிவாகக் கட்டினார். ஒளி ஓடுகள் பதித்தார். திருமடத்தின் எதிரில் ஒரு அருமையான நூலகத்தைத் தக்கார் உதவியுடன் ஏற்படுத்தினார். 10.02.1966 ஆம் ஆண்டு திருப்பூந்துருத்தித் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டின் போது புலவர். வெள்ளாம்பிரம்பூர் க.அருணாசலம் அவர்களைக் கொண்டு திருப்பூந்துருத்தித் தல வரலாற்றினை எழுதச் செய்து வெளியிட்டார்.

     “சீரார் நாவுக்கரசு தெய்வத் திருமடத்தை
      காரார் திங்களும் ஞாயிறும் – பேராள
      பெருமான் பிரகாரத்தில் பெரும்படம் உருவமைத்த
      பெருமான் பக்கிரி சாமியே”

என்று பூந்துருத்தி வாழ் சைவப் பெருமக்கள் போற்றினர்.

1998-இல் மீண்டும் திருப்பூந்துருத்தி வந்த நம் துறவியார் அப்பர் திருமடத்தைச் சென்று பார்த்தார். 33 ஆண்டுகளுக்கு முன் நல்ல முறையில் திருப்பணி செய்யப் பெற்றிருந்த அப்பர் மடம் மீண்டும் சீர் குன்றிக் கிடந்தது. நூலகம் அழிந்து கழிப்பிடமாயிற்று. அப்பர் மடம் புதர் மண்டி நடுக்கூடத்தில் பெரும் மரம் முளைத்துக் கிடந்தது. மடத்தைத் துறவியார் திருப்பணி செய்யக் கருதினார். அங்கு பல இன்னல்களுக்கு ஆளானார். முரடன் ஒருவன் இவரைக் கொல்லக்கருதி கொடுவாளுடன் திரிவதை அறிந்து அவன் இருக்கும் இடத்திற்கே சென்று நல்லறிவு புகட்டி அப்பரின் அருஞ் செயல்களைக் கூறித் திருவாளன் திருநீறு தந்து திருத்தினார்.

திருப்பணியைச் சிறந்த முறையில் தன் சொந்தப் பணத்தைச் செலவிட்டு முடித்தார். 27.11.1998-இல் திருக்கோயில் செயல் அலுவலர் திரு. வெற்றிச்செல்வன் அவர்களிடம் திருமடத்துப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டார். பூந்துருத்தி பி.ஜே.பி மாநில விவசாய அணிச் செயலாளர் திரு.சிவக்குமார் அவர்கள் இன்றளவும் துறவியாருக்குத் தேவையான திருமடத்தொண்டுகளில் முன்னின்று செயல்படுகிறார்.

மேலும் ஊர்ப் பெரியோர்கள், தஞ்சை வாழ் அன்பர்கள், அடியார்களின் உதவியுடன் மாதந்தோறும் சதயநாளில் அப்பர் திருமேனிக்கு அபிடேகம், வழிபாடு நடத்தி வருகிறார். அப்பரடிகளின் சித்திரைத் சதயவிழாக் குருபூசையை மிகச்சிறப்பாக ஆண்டுதோறும் செய்து வருகிறார். அன்றைய நாளில் சொற்பொழிவு, சைவசமய நல்லறிஞர் ஒருவருக்குப் பாராட்டு, நண்பகல் அன்னம்பாலிப்பு முதலியவற்றைத் தக்கார் உதவியுடன் செய்து வருகிறார். ஓதுவார்களைக் கொண்டு திருமுறை நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கும் சிறப்புச் செய்கிறார். திருமுறைபாடும் சிறார்கள் பரிசும், பாராட்டும் பெறுகின்றனர்.

ஐந்தாம் ஆண்டுச் சதயவிழாவில் திங்களூரில் வாழ்ந்து வரும் அப்பூதியடிகளாரின் வழித்தோன்றல் சிவத்திரு. சீத்தாராமன் ஐயா அவர்களுக்கு அப்பர் திருமடத்தில் திருவையாறு முத்துக்குமாரசாமித் தம்பிரானைக் கொண்டு பொன்னாடை போர்த்துப் பட்டம் வழங்கினார்.

2006-இல் நூறாவது சதய விழாவை மிகச் சிறந்த முறையில் நடத்திச் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டார். இவ்விழா தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில், பூம்புகார் உழவாரம் திரு. இரா. இராசசேகரனார் முன்னிலையில் நடைபெற்றது. 2009-இல் சூரியனார் கோயில் ஆதினமும், 2010-இல் திருவாவடுதுறை குருமகா சந்நிதானங்களும் கலந்து கொண்டு சதயவிழாவைச் சிறப்பித்தனர்.

திருவாலம்பொழில் திருக்கோயில் திருப்பணியின் போது கருவறைத் திருப்பணியைத் துறவியார் ரூ 1,00,000 செலவில் செய்து முடித்தார்.

திருத்துறைப்பூண்டி வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் கெளரி அம்மை உடனுறை திருக்கயிலாயநாதர் திருக்கோயில் திருப்பணியைத் 1999-ஆம் ஆண்டு தமது சொந்தப்பணம் ரூ 7,00,000 கொண்டு முடித்தார். திருக்குடநன்னீராட்டைச் சிறந்த முறையில் செய்தார்.

2004-ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 23,24,25 ஆகிய நாட்களில் தஞ்சாவூர் தெய்வத்தமிழ் வழிபாட்டுப் பேரவையும், பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றமும் தஞ்சை இராசராசன் சமயச் சங்கத்தில் நடத்திய தெய்வத்தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் துறவியார் கலந்து கொண்டு சிறந்த முறையில் பயிற்சியை நிறைவு செய்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளிடம் சான்றிதழ் பெற்றார்.

கோவை கற்பகம் பல்கலைக் கழகமும், பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றமும் இணைந்து நடத்தி வரும் பல சமயப்பயிற்சி வகுப்புகளில் பன்னூறு அடியார்களுக்குத் தீக்கை செய்து குருமூர்த்தியாய் விளங்கி வருகிறார்கள்.

13-06-1936 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டி வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் மாரியப்பபிள்ளை, கண்ணம்மாள் ஆச்சியின் மகனாகப் பிறந்தவர் கணேசனார். துறவியார் இளமையிலேயே ரெட்டியப்பட்டி சுவாமிகளைக் குருநாதராக ஏற்றுக் கொண்டு கடும்விரதங்களைக் கடைபிடித்தார். குன்றக்குடி அடிகளிடம் சமய தீக்கையும், காசி மெளனசாமிகளிடம் சிவ தீக்கையும் பெற்றவர்.

கணேசனார் இல்லற வாழ்வைச் செம்மையாக நடத்திய பின்பே துறவறம் பெற்றார். பூர்வாசிரமத்தில் வாழ்க்கைத் துணைநலமாகத் திருமதி. சந்திரா அம்மையார் அமைந்தார். இல்வாழ்க்கையின் பயனாகக் குமார், அற்புதம் என்னும் இரு ஆண்மக்களும், கற்பகம், இராஜம் என்னும் இரு பெண் மக்களும் பிறந்தனர். துறவியாரின் அருள் வாழ்விற்குப் பெரும் பொருளுதவி செய்துவருபவர் இவரது பூர்வாசிரமத் திருமகன் அற்புதம் (பொறியாளர், சென்னை) அவர்கள். மேலும் அற்புதம் அவர்களின் துணைவியார் திருமதி சுஜாதா அவர்களும், இவ்விணையர்களின் குழந்தைகள் செல்வன்.அகிலேஷ், செல்வன்.அனிருத் ஆகியோரும் துறவியாரின் சிவபுண்ணியத்தில் பெரும்பங்கு கொள்கின்றனர். திருப்பூந்துருத்தி, வளப்பக்குடி மற்றும் பல்வேறு திருப்பணிகளுக்கும் இவர்கள் தந்த பணம் பல இலட்சம் ரூபாய்களாகும். இவற்றை எல்லாம் அப்பர் பெருமான் செய்ததாகவே சொல்லும் துறவியார் அவர்கள் அப்பரடிகள் கூறியது போல் “மனிதரில் தலையாய மனிதரே”…

© 2010 Manivasagar Arutpani Mandram, TamilNadu, India. | All rights reserved.