lingam siva

 

 

 

 

வண்ணானைக் கும்பிட்டார்


—  முனைவர்  ந. இரா. சென்னியப்பனார்


இன்றைய தர்மபுரி முன்பு தகடூர் என வழங்கி வந்தது. தகடூரைத் தலைநகராகக் கொண்டு கங்க நாட்டையும், தகடூர் நாட்டையும் அதியமான் மரபினர் ஆண்டு வந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் சோழ நாட்டை ஆண்டபோது அதியமான் ஒருவன் தகடூரில் ஆட்சி செய்துவந்தான். அப்போது வண்ணானைக் கும்பிட்டார் என்னும் பெயருடைய அடியார் ஒருவர் தகடூர் வந்தார். தகடூரில் சாணயிரம் முழமாயிரம் உடையார் கோயில், திருவேளாவியீச்சுரம் உடையார் கோயில், ஓராயிர ஈச்சுரம் உடையார் கோயில் ஆகிய கோயில்கள் பூசையின்றியிருந்த நிலையை வண்ணானைக் கும்பிட்டார் என்ற அடியார் அதியமானுக்கு எடுத்துக் கூறினார். அதியமான் அவ்வடியாரையே தக்கவரைக் கொண்டு வர வேண்டினான். அடியாரும் தக்கவரைக் கொண்டுவந்து பூசை செய்ய ஏற்பாடு செய்தார். அதியமானும் வேண்டிய தானங்களைச் செய்தான்.

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு பத்தாவது நிகரிலி சோழ மண்டலத்துக் கங்க நாட்டுத் தகடூர் நாட்டுத் தகடூரில் சாணாயிரம் முழமாயிரம் உடையார் கோயில், திருவேளாவியீச்சுரம் உடையார் கோயில், ஓராயிர ஈச்சுரம் உடையார் கோயில் – இக்கோயில்கள் இன்னதனைக் காலம் பாழ்பட்டுக் கிடந்தது என்று அறிவாரில்லை. திருக்காளத்தியினின்றும் ஆண்டார் வண்ணானைக் கும்பிட்டார் எழுந்தருளி இக்கோயில்கள் கிடக்கிற அனுசுதத்தைக் கண்டு அதியமான் மாடெ சென்று ...... பூசிக்க வேண்டும் என்று ஆண்டார் அதியமானுக்குச் சொல்ல அவரும் ஆவானொரு சிவப்பிராமணனைக் கொடுவாரும் என்னக் ....... ஆண்டாரும் கொடு வந்து காட்ட ....... ஊர் காணியகத்தந்து ........ என்ற கல்வெட்டு இதனைத் தெரிவிக்கின்றது.

வண்ணானைக் கும்பிட்டார் என்று பிற்காலத்தில் அடியார் ஒருவர் பெயர் வைத்துக் கொண்டுள்ளார். வண்ணானைக் கும்பிட்டார் என்ற பெயர் அறுபான்மும்மை நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் நாயனாரைக் குறிக்கும்.

சேரநாடாகிய மலை நாட்டை ஆண்ட செங்கோற் பொறையன் என்னும் மன்னன் அரசு பதவியை நீத்துத் தவம் செய்யச் சென்றான். அக்காலத்தில் திருவஞ்சைக்களத்தில் சிவத்தொண்டு செய்து வந்த பெருமாக் கோதையாரை ஆட்சியுரிமையை ஏற்றுக் கொள்ளுமாறு அமைச்சர்கள் வேண்டிக் கொண்டனர். இறைவன் திருவருளை வேண்டிய பெருமாக் கோதையார்க்குச் சிவ வழிபாட்டுச் சிறப்பும், அஃறிணை உயிர்களும் மக்களும் கூறுவனவற்றை மனத்தினால் அறியும் நுண்ணுணர்வும், வீரமும், ஈகையும் மன்னர்க்கு வேண்டிய அனைத்தும் வந்து எய்தின. அஃறிணை உயிர்களும் உயர்திணை மக்களும் கூறிய சொற்பொருள்களை உய்த்துணரும் நுண்ணறிவினைப் பெற்றதால் கழறிற்றறிவார் எனப் பெயர் பெற்றார்.

நல்லாட்சி செய்துவந்த அவர் திருவஞ்சைக்களத்து இறைவனை நாள்தோறும் வழிபட்டு வந்தார். ஒருநாள் வழிபாடு முடிந்து யானை மீது அமர்ந்து பரிசனங்கள் சூழ்ந்து வர நகரில் உலாப் போந்தார். அப்போது வண்ணான் ஒருவர் உவர்மண் பொதியைத் தோளில் சுமந்து கொண்டு எதிரே வந்தான். மழையினால் நனைந்து வந்தார். மழையினால் நனைந்து வந்ததால் உவர் மண் உடல் முழுதும் படிந்து வெளுத்திருந்தது. உடல் முழுதும் திருநீறு பூசிய அடியார் திருவேடமாக அக்காட்சி தோன்றிற்று. சேரமான் விரைவாக யானை மீது இருந்து இறங்கி வண்ணானைக் கும்பிட்டார். மன்னன் தன்னைக் கும்பிட்டதைக் கண்ட வண்ணான் மனம் கலங்கிப் பயமுற்றுச் சேரமானைப் பார்த்து ‘அடியேன் தங்கள் அடிமைத் தொழில் செய்யும் வண்ணான்’ என்று பணிந்து நின்றான். அவன்பால் மகிழ்ந்த சேரமான், ‘அடியான் அடிச்சேரன்!, சிவனடியார் திருவேடத்தை நினைக்கும்படி செய்தீர், இதுபற்றி வருந்தாமல் செல்வீராக’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

     “மன்னர் பிரான் எதிர் வண்ணான் உடல் உவர் ஊறி நீறார்
      தன்னர் பிரான் தமர்போல வருதலும் தான் வணங்க
      என்னர் பிரான் அடி வண்ணான் என அடிச் சேரன் எனும்
      தென்னர் பிரான் கழறிற்றறிவார் எனும் சேரலனே”

என்று நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் பாடியுள்ளார். சேக்கிழார் பெருமானும் பெரியபுராணத்தில் இதனை விரிவாகப் பாடியுள்ளார். சேரமான் பெருமாள் நாயனார்க்கு வண்ணானைக் கும்பிட்டார் என்ற பெயர் ஏற்பட்டது. அதனை அடியார்கள் தம் பெயராகச் சூட்டி மகிழ்ந்துள்ளார்கள்.

சிவந்த தாமரை போன்ற திருவடிகள், அடியார்களைத் தாங்குகின்ற திருவடிகல், அத்தகைய இறைவன் திருவடிகளைச் சேரவிடாமல் தடுக்கின்ற கொடிய தன்மையுடையவ ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலங்கள். அம்மலங்களை ஞானநீரால் கழுவி அடியார்களுடன் கலந்து கூடி மயக்கம் நீங்க அன்புமிக்க அடியார்களின் திருவேடத்தையும், சிவாலயத்தையும் இறைவன் என்றே கண்டு வழிபட வேண்டும் என்பதனை,

     “செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
      அம்மலம் கழீஇ அன்பரோடு மரீஇ
      மால் அற நேயம் மலிந்தவர் வேடமும்
      ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே”.

என்று சிவஞான போதம் சுட்டுகின்றது.

‘இனிப் பத்தரது திருவேடத்தையும், சிவாலயத்தையும் பரமேசுவரன் எனக் கண்டு வழிபடுக’ என்ற மேற்கோளும், ‘அவன் மற்று இவ்விடங்களில் பிரகாசமாய் நின்றே அல்லாத இடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்’ என்ற ஏதுவும், அம்முதல்வன் எங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து மாத்திரையே தயிரின் நெய் போல விளங்கி நிலைபெற்று அல்லுழிப் பாலின் நெய் போல வெளிப்படாது நிற்றலான், இனிப் பத்தரது திருவேடத்தையும், சிவாலயத்தையும் பரமேசுவரன் எனக் கண்டு வழிபடுக என மேற்கொண்டது’ என்ற மாபாடிய விளக்கமும் இங்கு நினைத்தற்கு உரியன.

அடியார்கள் திருவேடத்தைச் சிவபெருமான் என்றே கருதி வணங்குவது சைவ மரபாகும். சேரமான் பெருமாள் நாயனார், அடியார் வேடம் போன்றிருந்த வண்ணான் வடிவைக் கண்டதும் வணங்கினார் என்பது மிக உயர்ந்த பக்தி நிலையைக் காட்டுகின்றது. சேரமான் பெருமாள் நாயனாரின் தோழர் சுந்தர மூர்த்தி நாயனார் ஆவார். அவரும் அடியார்பால் மிக்க ஈடுபாடு உடையவர். அடியார்களைப் பற்றித் திருத்தொண்ட்த் தொகை பாடியுள்ளார். சுந்தர மூர்த்தி நாயனார் தில்லைக்குச் சென்றார். தில்லையைச் சுற்றி மலைகள் போல உயர்ந்த மதில் இருந்தது. மதிலையடுத்து ஆழமான நீர் நிலையிருந்தது. அங்கு தாமரை மலரிலிருந்து வண்டு, பக்கத்தில் இருந்த தாழம் பூவினுள் சென்று மகரந்தப் பொடியில் மூழ்கி வெளியே வந்தது. தூய வெண்ணீறு பூசிய அடியார்கள் போன்று வண்டு காட்சியளித்ததைக் கண்டு மகிழ்ந்து சுந்தர மூர்த்தி நாயனார் கோவிலினுள் சென்றார்.

     “மன்றுளாடு மதுவின் நசையாலே
      மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே
      குன்று போலும் மணி மாமதில் சூழுங்
      குண்டகழக் கமல வண்டலர் கைதைத்
      துன்று நீறுபுனை மேனியவாகித்
      தூய நீறுபுனை தொண்டர்கள் என்னச்
      சென்று சென்று முரல்கின்றன கண்டு
      சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்”.

என்று சேக்கிழார் பாடியுள்ளார். சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தர மூர்த்தி நாயனாரும் ஒரே எண்ணங் கொண்டவர்கள் என்பது புலனாகிறது. இருவர் குருபூசையும் ஆடிச் சுவாதி நாளாகும்.

© 2010 Manivasagar Arutpani Mandram, TamilNadu, India. | All rights reserved.