lingam siva

 

 

 

 

மாதொரு பாகன்


—  முனைவர்  ந. இரா. சென்னியப்பனார்


  “பாகம் பெண் உருவானாய் போற்றி” (திருவாசகம்)

இறைவனுக்கு அருவம், அருவுருவம், உருவம் என்ற மூன்று நிலைகள் உள்ளன. இது சைவ மரபு. அருவம் என்பது கண்ணால் காணஇயலாத நிலை. ஞான நெறியில் வழிபாடு செய்வோர்க்கு உரியது. அருவுருவம்-சிவலிங்க வடிவம் ஆகும். கண்ணால் காணலாம். உருவம் இருபத்தைந்து வகைப்படும். மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்து என்று வழங்குவது சைவ முறையாகும். இருபத்தைந்து திருவுருவங்களில் ஒன்றே மாதொருபாகன் – உமையொருபாகன் வடிவம்.

புராண வரலாறு

உமாதேவி இறைவனோடு வீற்றிருந்தாள். வழிபட வந்த பிருங்கி முனிவர் இறைவனை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். அதனைக் கண்டு கோபம் அடைந்த உமாதேவி, பிருங்கி முனிவரின் உடலில் உள்ள – சக்தியைத் தரும் தசையினை நீங்கச் செய்தாள். இதனால் நடக்க முடியாதவரானார். இறைவன் முனிவர்க்கு நிற்பதற்காகவும் நடப்பதற்காகவும் மூன்றாவது காலினையும் ஊன்று கோலினையும் தந்து உதவினார். உமாதேவியோ கடுமையாகத் தவஞ்செய்து, இறைவன் உடலில் இடப் பாகத்தைத் தன்னுடையதாகப் பெற்றாள்.

தொன்மைக்கோலம்

உமையொருபாகன் வடிவம் மிகவும் தொன்மையானது.

     “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து)

     “பெண்உரு ஒரு திறன் ஆகின்றது” (புறநானூறு கடவுள் வாழ்த்து)

என்று சங்க காலத்திலேயே உமையொரு பாகனைப் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன.

இறைவனுக்குரிய வலப் பாகத்தில் புலித்தோலும், சங்கக் குழையும், பால் போன்ற வெண்மையான திருநீறும் சூலமும்-இறைவிக்குரிய இடப்பாகத்தில் பட்டாடையும், சுருண்ட தோடும், பசியசந்தனமும், பச்சைக்கிளியும், தொகுதியான வளையல்களும் உடையவராய் மிகப் பழமையான கோலத்தில் உமையொருபாகன் உள்ளார் என்பதனை மாணிக்கவாசகர்,

     “தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
     பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
     சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
     கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி”

என்று திருவாசகத்தில் பாடியுள்ளார்.

மாணிக்கவாசகர் காலத்திலேயே தொன்மைக் கோலம் என்று பாடியிருப்பது உமையொருபாகனின் பழமையைக் காட்டுகின்றது.

திருச்செங்கோட்டு உமையொருபாகன்

மலைக்குச் செங்குன்று என்றும், ஊர்க்குச் செங்குன்றூர் என்றும் சங்க காலத்தில் வழங்கின. செங்குன்றூர்கிழார் சங்க காலப்புலவர் ஆவார். திருஞானசம்பந்தரும் கொடிமாடச் செங்குன்றூர் என்றே பாடியுள்ளார். மலையைக் குன்று என்று வழங்குவதைப் போலவே, கோடு என்றும் வழங்குவது உண்டு. செங்குன்று செங்கோடு எனவாயிற்று.

     “சீர் கெழுசெந்திலும் செங்கோடும் ஏரகமும்”

என்று இளங்கோவடிகள் முருகன் உறையும் இடமாகச் செங்கோடு எனும் தலத்தைக் குறித்து உள்ளார். திருப்பரங்குன்று போன்று திருச்செங்கோடும் முருகனுக்கும் இறைவனுக்கும் உரிய தலமாகும். திருச்செங்கோட்டில் மலைக்கோவிலில், மேற்குப் பார்த்த நிலையில், கருவறையில் உமையொருபாகன் காட்சி தருகிறார்.

வடமொழியில் அர்த்த நாரீசுவரர் என வழங்கப்பெறுகிறது. அர்த்தம் – பாதி, நாரி - பெண், ஈசுவரர் – ஐஸ்வர்யம் உடையவர் – செல்வன் – இங்கு இறைவனைக் குறிக்கும். பெண் ஒரு பாகன், உமையொருபாகன், பெண்ணொரு பாகங் கொண்ட கண்ணுதற் கடவுள் முதலிய பெயர்களால் தமிழில் வழங்கப்பெறும்.

     “வெந்த வெண்நீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
     பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி”

என்று திருஞானசம்பந்தர் திருச்செங்கோட்டுத் தேவாரத்தில் பாடியுள்ளார். வெண்மை நீறணிந்த வெண்மைக் கோலத்தோடு இருப்பதை இன்றும் காணலாம்.

மலைமகள் கூறுடையான், ஏலமலர்க்குழலாள் ஒரு பாகம், பணைத்தோளியோர் பாகம் என்றெல்லாம் தலை மகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர் பாடியுள்ளார். இலைத் தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவையுடையீர் எனத் திருஞானசம்பந்தர் பாடியதற்கேற்பத் தண்டு இருப்பதைக் காணலாம்.

தத்துவம்

நின்ற கோலத்திலுள்ள உமையொருபாகன் வடிவத்தில் இடப்பக்கத்தில் அம்மைக்குரிய அடையாளங்களில் கொங்கையிருக்கும், வலப்பாகத்தில் இறைவனுக்குரிய அடையாளங்களில் முழங்கால் வரை புலித்தோல் இருக்கும். நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுக் கைகள் உருவங்களில் அமைந்திருக்கும்.

‘உமையம்மையும் தாமும் ஒன்றாம் தன்மையை வடிவிலும் வைத்து விளக்குதல் போல, அம்மையை இடப்பாகத்தில் நிறுவி நாற்கரங்களும் உடையவராய் அர்த்த நாரீசுவரர் உள்ளார்’ எனச் சிவஞான முனிவர் பாடியுள்ளார்.

கணவன் மனைவி ஒற்றுமையுடன் இல்லறம் நடத்தவும் இல்லற இன்பம் இனிது பெறவும் அர்த்த நாரீசுவரர் வழிபாடு பயன்தரும் என்று கச்சியப்ப முனிவர் பாடியுள்ளார்.

வாழ்க்கையில் கணவன் மனைவியின் ஒருமைப்பாட்டைக் காட்டுவதே அர்த்த நாரீசுவரர் உருவம் ஆகும். அன்றே நம் இறைவன் அவ்வாறு கோலங் கொண்டுள்ளார் என்பது எண்ணி மகிழத்தக்கது.

© 2010 Manivasagar Arutpani Mandram, TamilNadu, India. | All rights reserved.