lingam siva

 

 

 

 

யானைத் தோல் போர்த்த அண்ணல்


—  முனைவர்  ந. இரா. சென்னியப்பனார்


“வாயே வாழ்த்து கண்டாய் மத யானை உரிபோர்த்துப்
      பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை
      வாயே வாழ்த்து கண்டாய்”
  ( திருநாவுக்கரசர் )

உலகில் வாழும் உயிர்கள் பலதிறத்தன, உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப இறைவன் வெவ்வேறு திருவுருவங்களை மேற்கொள்கிறான். உமாமகேசுரர், கல்யாணசுந்தரர் முதலிய திருவுருவங்கள் போக வடிவங்கள் எனப்படும். தட்சிணாமூர்த்தி முதலிய திருவுருவம் யோக வடிவம் எனப்படும். யானையுரி போர்த்த மூர்த்தி, மன்மதனையழித்த மூர்த்தி முதலியன வேக வடிவம் எனப்படும். கோபத்தையுடைய வேக வடிவங்கள் உயிர்கள் செய்த வினைகளைக் கெடுத்தற்கு எடுத்த அமைப்பாகும்.

‘வேகியானாற்போல் செய்த வினையினை வீட்டல் ஓரார்’ என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது. அத்தகு வேகியான கோப வடிவங்களுள் ஒன்று யானையுரிபோர்த்த திருவுருவமாகும்.

புராண வரலாறு (1)

மகிடாசுரன் மகன் கயாசுரன் ஆவான். பிரமனை நோக்கி மேருமலையில் கடுந்தவம் செய்தான். தவத்திற்கு இரங்கிப் பிரமன் காட்சி கொடுத்தான். பிறரால் அழியாத ஆயுள், ஆற்றல் வேண்டும் எனக் கயாசுரன் வேண்டினான், அவ்வாறே வரந்தந்த பிரமன் அனைவரையும் வெல்லும் ஆற்றல் உனக்குண்டு எனினும் சிவபெருமானிடம் செல்லாதே எனக் கூறி மறைந்தான். யானை உருவங்கொண்ட கயாசுரன் மக்கள், தேவர் ஆகிய அனைவரையும் வென்றான். ஒருமுறை முனிவர்களைக் கண்டதும் துரத்தினான். முனிவர்கள் பயந்து காசி விசுவநாதர் கோவிலின் பகுதியான மணிகர்ணிகையை அடைந்தனர். கயாசுரனும் கோவிலுக்குள் சென்றான். சிவபெருமான் உக்கிர வடிவோடு தோன்றி கயாசுரனின் மத்தகத்தில் திருவடியூன்றித் தோலையுரித்துப் போர்த்துக் கொண்டார். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் ததீசியுத்தரப் படலத்தில் இப்புராணச் செய்தியைப் பாடியுள்ளார்.

இலக்கியச் சான்றுகள்

சைவத் திருமுறைகள், புராணங்கள் அனைத்திலும் இச்செய்தி பாடப் பெற்றுள்ளது.

     “பிளிறூகுரல் மதவாரண வதனம் பிடித்துரித்து
      வெளிறூபட விளையாடிய விகிர்தன்!”

     “கரிதன்னைப் பண்டுரி செய்தோன்!”

     “வேழும் உரித்து உமையஞ்சக் கண்டு
      ஒண்திருமணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார்”

     “உரித்துமையாள் நடுங்க வொர் குஞ்சரத்தை”

     “மதகரியின் உரிபோர்த்தும் என்னை கொலாம்”

என சமயக் குரவர்கள் இச் செயலைத் தங்கள் பாடல்களுள் கூறியுள்ளனர்.

செயற்கருஞ் செயல்

யானையின் தோல் உரிக்க முடியாதது, உரிக்க முடியாததை உரித்தார் என்பது இறைவனின் வரம்பிலாற்றல் உடைமையை யுணர்த்திற்று.

சீவகசிந்தாமணியில், ‘வாரணத்தின் ஈருரி’ (செய்யுள் – 2787) என்பதற்கு நச்சினார்க்கினியர், யானையின் பசுந்தோல் பிறருடம்பிற் பட்டாற்கொல்லும் என்று உணர்க என்று விளக்கம் தந்துள்ளார். கொல்லும் தன்மையுடைய யானையின் பச்சைத் தோலைப் போர்த்தார் என்பது பிறவற்றால் அழிவு நேராத பேராற்றலை உணர்த்தும்.

விநாயகர் கொன்ற கயாசுரன் வேறு

மரகத முனிவர் – விபுதை ஆகியோருக்கு மகனாக தோன்றியவன் கயாசுரன். சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்து வரம் பெற்றவன். மதங்க புரத்தில் ஆட்சி செய்தவன். தேவர்களைத் துன்புறுத்திய கயாசுரனை விநாயகர் கொம்பை ஏவி அழித்தார், பின் பெருச்சாளி வாகனமாகி விநாயகப் பெருமானை தாங்கினான்.

     “கைவேழ முகத்தவனைப் படைத்தோர் போலும்
      கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலும்”

என்பது திருநாவுக்கரசர் வாக்கு.

கந்தபுராணம் கயமுகன் உற்பத்திப் படலத்தில் இப் புராணச் செய்திகள் விரிவாகப் பாடப் பெற்றுள்ளன. இரண்டும் வேறு வேறு காலத்தில் நிகழ்ந்த வேறு வேறு நிகழ்ச்சிகள் – இரண்டு கயாசுரன்களும் வேறானவர். வேறுபாட்டிற்காக, யானைத் தோல் உரித்ததைக் காயசுரன் என்றும், விநாயகரால் கொல்லப்பட்டவனைக் கயமுகாசுரன் என்று குறிப்பிடுவது உண்டு.

புராண வரலாறு (2)

தாருகாவனத்து முனிவர்கள் கருமமே பயன்தரும் என்ற கொள்கை உடையவர்கள், தவத்தால் செருக்குற்றிருந்தனர். அவர்தம் மனைவியர், தங்களைப் போல் கற்பிற் சிறந்தவர் வேறு யாரும் இல்லை எனச் செருக்குற்றனர். முனிவர்கள் செருக்கடக்கத் திருமால் மோகினியாகவும், முனிபத்தினியர் செருக்கடக்கச் சிவபெருமான் பிச்சாடராகவும் சென்றனர். முனிவர்களும் பத்தினியரும் நிலை குலைந்தனர். உண்மையுணர்ந்து ஆபிசார வேள்வி செய்து, பூதப்படை, பாம்பு, முயலகன், மழு, மான், உடுக்கை, வெண்டலை, சிங்கம், புலி, யானை முதலியவற்றைச் சிவபெருமான் மீது ஏவிவிட்டனர். அவர், பூதப் படைகளைக் கணங்களாக ஆக்கிக் கொண்டார். பாம்புகளை அணிந்து கொண்டார், முயலகனைக் காலின் கீழ் மிதித்துக் கொண்டார், சிங்கம், புலி, யானை ஆகியவற்றை உரித்து தோலையணிந்து கொண்டார்.

     “தங்கிய மாதவத்தின் தழல்வேள்வியின் நின்றெழுந்த
      சிங்கமும் நீள்புலியும் செழுமால் கரியோடு அலறப்
      பொங்கிய போர்புரிந்து பிளந்து ஈருரிபோர்த்தது என்னே!
      செங்கயல் பாய் கழனித் திரு நாகேச்சரத்தானே”

என்று சுந்தரமூர்த்தி நாயனார் இதனைப் பாடியுள்ளார்.

செம்மையான கயல் மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயல்களையுடைய திருநாகோச்சுரம் என்ற தலத்தில் உள்ளவனே! தங்கிய பெரிய தவத்தினால் வேள்வித்தீயிலிருந்து தோன்றிய சிங்கமும், நீண்ட புலியும், பருத்த பெரிய யானையுடன் கதறி அழியும்படி மிகுந்த போரைச் செய்து கழித்து அவற்றிலிருந்து உரித்த தோலைப் போர்த்த செயல்தான் எத்தகைய வியப்புடையது? என்பதை அப்பாடலின் பொருளாகும்.

தாருகாவனத்து முனிவர்கள் இறைவன் மீது ஏவிவிட்டவற்றுள் யானையும் ஒன்று. அதனையுரித்து தோலை போர்த்துக் கொண்டார். கயாசுரன் யானை வடிவங் கொண்ட அரக்கன். அவன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டது ஒரு நிகழ்ச்சி. தாருகாவனத்து முனிவர்கள் ஏவிவிட்ட யானையை போர்த்துக் கொண்டது மற்றொரு நிகழ்ச்சி. இரண்டும் வேறு வேறு நிகழ்ச்சிகள், வேறு வேறு காலத்தில் நடந்தவை.

தாருகாவனத்து முனிவர்கள் அனுப்பிய யானையின் தோலையுரித்த புராணச் செய்தியைத் திருமூலரும்,

     “மூத்தீக்கொளுவி முழங்கெரி வேள்வியுள்
      அத்தியுரி அரனாவது அறிகிலர்
      சத்தி கருதிய தாம்பல தேவரும்
      அத்தீயினுள் எழுந்தன்று கொலையே!”

என்று பாடியுள்ளார்.

தாருகாவனத்து முனிவர்கள் செய்த வேள்வியுள் எழுந்த யானையின் தோலையுரித்த அரன் பெருமையைத் தேவர்கள் அறியவில்லை. சக்தியை கருதிய தேவர்கள், அவ்வேள்வித்தீயில் தோன்றியவை கொலையுண்டன என்பதை மட்டும் அறிவர் என்பது அப்பாடற் பொருள்.

உருவ அமைப்பு

நின்ற நிலையில் திருவுருவம் அமைந்திருக்கும். யானைத்தோல் பின்புறம் போர்த்த அமைப்பு. யானையின் தலை கீழேயிருக்கும். அதன் மீது இடக்காலை ஊன்றி வலக்காலை மடித்து நிற்கும் நிலை. எட்டுக் கைகள் இருக்கும். மேல் இரண்டு கைகள் யானைத் தோலை தாங்கியிருக்கும். வலப்பக்கம் மேலிருந்து இரண்டாம் கையில் கத்தி, மூன்றாம் கை அங்குசம், நான்காம் கை திரிசூலம் ஆகியன தாங்கி இருக்கும். இடப்பக்கம் மேலிருந்து இரண்டாம் கை கேடயம், மூன்றாம் கை வில், நான்காம் கை கபாலம் ஆகியன தாங்கி இருக்கும். சில திருவுருவங்களில் நான்கு கைகள் மட்டும் இருப்பது உண்டு. தலையில் சடாமகுடம், தொங்கிய நிலையில் தலைமாலை இருக்கும் – பேரூர்க் கோவில் கனகசபையில் உள்ள யானையுரி போர்த்த மூர்த்தி மிகச் சிறப்புடையது.

தத்துவம்

ஐம்பொறிகளை யானையாகக் கூறுவது மரபு. ‘உரன் எனும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்’ என்பது வள்ளுவர் வாக்கு. ஐம்பொறிகளை வெல்ல வேண்டும். தோலையுரித்துப் போர்த்தல் ஆணவத்தை அடக்குவதைச் சுட்டும்.

பயன்

யானையுரி போர்த்த மூர்த்தியை வணங்கினால் ஐம்புலன்களின் ஆசைகளை வெல்லலாம். ஆணவ மலத்தின் கொடுமையைத் தவிர்க்கலாம்.

© 2010 Manivasagar Arutpani Mandram, TamilNadu, India. | All rights reserved.