lingam siva

 

 

 

 

பிச்சாட மூர்த்தி


—  முனைவர்  ந. இரா. சென்னியப்பனார்


கடவுள் கருணை கொண்டு பலவகையான உயிர்களும் உய்ய வேண்டும் என்று எண்ணிப் பலவகையான திருமேனிகளைக் கொள்கிறார். இத்தகு திருமேனிகள் பிறரால் படைக்கப்பட்டவையல்ல. கடவுள் இச்சையால் விரும்பியபடி கொள்ளும் திருமேனிகள் அவை. ‘ஞானம் திருவுருவாகக் கொள்வர்’ என்பர் குமரகுருபரர். ‘பலபல வேடமாகும் பசுவேறும் எங்கள் பரமன்’ என்பர் திருஞானசம்பந்தர். பல்வேறும் திருமேனிகளில் ஒன்று பிச்சாடர் திருவுருவமாகும்.

புராண வரலாறு – 1

தாருகா வனத்து முனிவர்கள் தவத்தில் சிறந்து விளங்கினார்கள். செய்யும் வினைகளே பயன் கொடுக்கும், கடவுள் வேண்டுவதில்லை என்னும் கொள்கையுடையவர்கள். கணக்கில்லாத வேள்விகளைச் செய்து வந்தனர். அவர்தம் மனைவியர் கற்பைக் காட்டிலும் சிறந்தார் வேறு யாரும் இல்லை எனச் செருக்குக் கொண்டிருந்தனர்.

தாருகா வனத்து முனிவர்களுக்கும், அவர்தம் மனைவியர்களுக்கும் அறிவு புகட்டும் பொருட்டுச் சிவபெருமான், திருமாலை அழைத்தார், வந்தடைந்த திருமலை மோகினியுருவம் கொள்ளச் செய்தார், சிவபெருமான் பிச்சாடர் உருவங் கொண்டார். ஆடையற்ற நிலையில் அழகிய திருவுருவம் கொண்டார்.

மோகினியுடன் பிச்சாடர் தாருகாவனம் சென்றடைந்தார். மோகினியை முனிவர்பால் அனுப்பி வைத்தார். முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கி, அறிவழிந்து தவநெறி நீங்கி, அவநெறி கொண்டு காம வேட்கையால் இழுக்கப்பட்டுப் பின் சென்றனர். விளக்கைக் கண்ட விட்டில் பூச்சிகளைப் போலத் துன்புற்றனர்.

பூதகணங்கள் பிச்சைப் பாத்திரத்தைச் சுமந்து சூழ்ந்துவர, இறைவன் பிச்சையேற்கும் கோலத்தோடு முனிபத்தினியர் வீதிவழியே சென்றார். யாழினும் இனிய குரலோடு இன்னிசைப் பண் பாடிச் சென்றார். பண்ணின் இன்னிசை கேட்ட முனிபத்தினியர் வீட்டை விட்டுத் தெருவிற்கு வந்தனர். பிச்சாடரின் அழகிய திருவுருவத்தைக் கண்டனர். காமவேட்கையால் தம்மை மறந்தனர். சிலர் பிச்சையிட்டனர். பிச்சையிடும் போதே சிலர் கைவளையல்கள் நழுவின, சிலர் ஆடைகள் அவிழ்ந்தன. சிலர் நாணம் அழிந்தனர். சிலர் ஐயனை அணைய விரும்பினர்.

பிச்சாடர் திருவிளையாட்டால் மாயவித்தைப் போல அம்மாதர்களிடம் நாற்பத்து எண்ணாயிரம் புதல்வர் உதித்தனர். அவர்கள் பிச்சாடரை பணிந்தனர். ‘தவஞ் செய்து எம் அருள் பெறுவீர்’ எனக் கூறி அப்புதல்வர்களை அனுப்பி வைத்தார்.

முனிவர் பின்தொடர மோகினி பிச்சாடர்பால் வந்து சேர்ந்தாள். தாருகா வனத்து முனிவர்கள் உண்மையை உணர்ந்தனர். தம் தவம் அழிந்ததற்க்கும், மனைவியர் கற்பு அழிந்ததற்க்கும் சிவபெருமானே காரணம் என்பதனை அறிந்தனர். ஆபிசார வேள்வி செய்து பூதப்படை, பாம்பு, முயலகன், உடுக்கை, மழு, மான், வெண்டலை, புலி, அங்கி, பேய், சூலம், முதலியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக ஏவினர். அவற்றை தமக்குரியனவாக ஆக்கிக் கொண்டார்.

இவ்வாறு தாருகா வனத்து முனிவர்களையும், அவர்தம் மனைவியர்களையும் செருக்கடக்கத் திருமால் மோகினியாகவும், சிவபெருமான் பிச்சாடராகவும் சென்றனர்.

     “அடியில் தொடுத்த பாதுகையும்
      அசைந்த நடையும் இசைமிடறும்
      வடியில் சிறப்ப நடந்தருளி
      மூழை யேந்தி மருங்கணைந்த
      தொடியில் பொலிதோள் முனிமகளிர்
      சுரமங்கையரை மயல்பூட்டிப்
      படியிட்டு எழுதாப் பேரழகால்
      பலிதேர் பகவன் திருவுருவம்”

என்று சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில் பாடியுள்ளார்.

புராண வரலாறு -2

தருகா வனத்து முனிபத்தினியர் கற்பு இழந்ததைக் கண்ட கணவர்களாகிய முனிவர்கள் கூடல் நகரில் அழகிய வணிக மகளிராகப் பிறக்குமாறு சாபம் இட்டனர். உடனே மகளிர் சாபம் நீங்க வழி கேட்டனர். சோம சுந்தரப் பெருமான் தீண்டும்போது சாபம் நீங்கும் என்றனர்.

அதன்படி மதுரையில் வணிகர் மகளிராகப் பிறந்தனர். உரிய பருவம் அடைந்தனர். சோம சுந்தரப் பெருமான் வளையல் வியாபாரியகத் தோன்றி வளையல்களைச் சுமந்து கொண்டு விலை கூறி வீதி வழியே வந்தார். வணிக மகளிர் மொய்த்தனர். வியாபாரியின் பேரழகில் மயங்கினர். கைகளை நீட்டி வளையல்களை அணிய வேண்டினர். காமக் கருத்தால் உடல் மெலிந்து வளையல்கள் கழன்றன. மீண்டும் சிறிய வளையல்களை அணியுமாறு வேண்டினர். அணிந்த வளையல்களுக்கு விலை என்ன என்று கேட்டனர். நாளை விலையைப் பெற்றுக் கொள்வோம் எனக்கூறி மறைந்தார். மதுரை சோம சுந்தரப் பெருமானே வளையல் வியாபாரியக வந்தார் என்பதனை அனைவரும் அறிந்தனர். வணிக மகளிர் இறைவன் கைதீண்டப் பெற்றதால் சாபம் நீங்கி நன்னிலையடைந்தனர்.

     “கற்புத் திரிந்தார் தமைநோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீர் ஆழி
      வெற்புத் திரிந்த மதில்கூடல் மேய வணிகர் கன்னியராய்ப்
      பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்றிட்ட சாபம் கேட்டு
      அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்
      அந்த மாடமதுரை நகர்க்கு அரசாகிய சுந்தரக் கடவுள்
      வந்து நும்மைக் கைதீண்டும் வழியிச்சாபம் கழியும் எனச்
      சிந்தை தளர்ந்த பன்னியரும் தென்னர் மதுரை தொன்னகரில்
      கந்த முல்லைத் தார் வணிகர் காதல் மகளிராய்ப் பிறந்தார்”

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் பாடியுள்ளார்.

பிச்சாடராக வந்தபோது பிச்சையிடும் முனி பத்தினியர்க்கும் பிச்சாடர்க்கும்

நடைபெற்ற உரையாடல்களைப் புலவர் பெருமக்கள் பலரும் சுவைப்படப் பாடியுள்ளனர். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் வளையல் விற்ற படலம், சிவப்பிரகாசரின் நவமணி மாலை, வள்ளலாரின் இங்கித மாலை முதலியன மிகச் சிறந்த இலக்கியச் சுவை வாய்ந்தவையாகும்.

திருவுருவ அமைப்பு :

நின்ற கோலத்தில் திருவுருவம் நடந்து சொல்லும் அமைப்பில் இருக்கும். கால்களில் மிதியடி இருக்கும். வலக்கால் குஞ்சிதமாகவும் இடக்கால் எடுத்த நிலையாகவும் இருக்கும். இடையில் ஆடையின்றி இருக்கும். நான்கு கைகளில் ஒருவலக்கை மானுக்கு புல் தரும் நிலை, மற்றொரு வலக்கை உடுக்கை வைத்திருக்கும் நிலை, ஒரு இடக்கை கபாலம் ஏந்திய நிலை, மற்றொரு இடக்கை மயில்தோகை வைத்த நிலை, மூன்று கண்கள், தலையில் சடாமண்டலம் அல்லது விரித்த சடை, இடப்பக்கத்தில் குறப்பூதம் பிச்சையுணவைச் சுமந்து கொண்டு நிற்கும்.

தேவாரப் பாடல்களில் பிச்சாடர்:

     “தாரிடும் போர் விடையன் தலைவன், தலையே கலனா
      ஊரிடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே”

என்று திருஞானசம்பந்தரும்,

     “பிச்சாடல் ஆடுவான்”

     “பிச்சையே புகுமாகிலும் வானவர்
      அச்சந் தீர்ந்து அருளாய் என்று அடைவரே”

     “பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே
      பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும்”

என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். பிற திருமுறைகளிலும் பிச்சாடர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

தத்துவம்:

பிச்சாடராகத் திருவுருவந் தாங்கிப் பிச்சையேற்பது தன் பசிக்காக அன்று, உயிர்களைக் காக்கும் பேரருளாலேயாகும். சிவபெருமான் உயிர்களின் போதமாகிய சீவபோதத்தைப் பிச்சையாக எற்றுத் திருவருளாகிய சிவபோதம் என்னும் புண்ணியத்தை அருளும் பொருட்டே பிச்சாடர் திருமேணி கொண்டு வந்தார்.

     “பரந்துலகேழும் படைத்த பிரானை
      இரந்துண்ணி யென்பார்கள், ஏற்றுக்கு இரக்கும்
      நிரந்தரமாக நினையும் அடியார்
      இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே”

என்பது திருமூலரின் திருமந்திரமாகும்.

சிறப்புடைய பிச்சாடர் திருவுருவங்கள்

பேரூர், தாரமங்கலம், தாடிக் கொம்பு, காஞ்சி கயிலாசநாதர் கோவில், தெளிச்சேரி முதலிய இடங்களில் உள்ள கல்லாலான பிச்சாடர் திருவுருவங்கள் மிகச் சிறப்புடையன. ஆடையின்றியிருக்கும் நிலையில் இடக்காலை மடித்து மேலே தூக்கி ஆடையில்லா நிலையை, நிர்வாணத்தை மறைத்துக் காட்டிய கயிலாசநாதர் சிற்பம் சிற்பியின் திறமையைக் காட்டுகின்றது. செப்புத் திருமேனிகளாக தமிழகக் கோயில்களில் பழைய பிச்சாடர் உருவங்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் பிச்சை வேடங்கொண்டு விழாவில் தானம் செய்த செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

பயன்:

பிச்சாடரை வழிபட்டால் சிற்றின்பத்தை நீக்கிப் பேரின்பத்தைக் கொடுப்பார். “பயிக்க வேடத்தவரைப் பரசில்…. கொள்ளும் போகம் வெறுப்பிப்பார்” என்பது கச்சியப்ப முனிவரின் அமுத வாக்காகும்.

© 2010 Manivasagar Arutpani Mandram, TamilNadu, India. | All rights reserved.