திருப்பேரூரில் 1993 ஆம் ஆண்டு மணிவாசகர் அருட்பணி மன்றம் அருள்மிகு பட்டிப்பெருமான் திருக்கோயிலில் மிக எளிய முறையில் தொடங்கப்பெற்றது. தொடக்க காலம் முதல் இதன் தலைவராக இருந்து நெறிப்படுத்தி வருபவர் "முனைவர் ந. இரா. சென்னியப்பனார்" அவர்கள். இம்மன்றம் "கடையனுக்கும் கடைத்தேற்றம்" என்ற அண்ணல் காந்தியாரின் கருத்துப்படி மானுடம் உயர வேண்டும் என்னும் கொள்கையைக் கொண்டது.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற தமிழ்மறைக்கேற்ப மனித இனம் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகிறது. சமயமும் சமுதாயமும் பிரிக்கக் கூடாதன என்பதை அறைகூவித்தமிழ்ச் சமுதாய மக்களை ஆற்றுப்படுத்துகிறது.
ஒவ்வொரு இனத்திற்கும் முகவரியே மொழிதான் என்பதை மக்கள் அறிய வேண்டும். மொழி அழிந்தால் அவ்வினமும் அழியும். எல்லாத் துறைகளிலும் தாய் மொழியாம் தமிழ் மொழி வளர வேண்டும். அவ்வத்துறை சார்ந்த வல்லுநர்கள் இதற்கு வழி தேட வேண்டும். மன்றம் சமயத்துறையை எடுத்துக் கொண்டுள்ளது. திருக்கோயில்கள், தனிமனித வாழ்க்கைச் சடங்குகள் முதலியவற்றில் தமிழ் வழியில் வழிபாடு என்பது மன்றத்தின் முதன்மைக் கொள்கையாகும்.
தொடக்க காலத்தில் மன்ற அன்பர்கள் பேரூர்ப் பட்டிப்பெருமான் திருக்கோயிலில் வாரவழிபாடு செய்து வந்தனர். அன்பர்கள் பெருகவே பேரூர் அரசம்பலவாணர் திருக்கோயில், தென்கயிலாயம், வடகயிலாயம், அழகிய சிற்றம்பலம், மாதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றில் உழவாரப்பணி செய்யப்பெற்றன.
அதன்பின்னர் தென்கயிலாயம் திருப்பணி செய்யப்பெற்றுத் திருக்குட நன்னீராட்டுச் செய்விக்கப்பெற்றது.மன்றத்திற்கு மிக உறுதுணையாகத் திருநெறிய தமிழ்மன்றத் தலைவர் திருமதி. சொர்ணா சோமசுந்தரம் அம்மாஅவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் இருந்தனர். அவர்களின் பொருளுதவியால் வடகயிலாயம் திருப்பணியும் திருக்குட நன்னீராட்டும் செய்யப்பெற்றன.
அன்றைய திருக்கோயில் அறங்காவலர் திரு. கௌரிசங்கர் அவர்களின் உதவியால் அழகிய சிற்றம்பலம் திருப்பணி செய்யப்பட்டது. மன்ற அன்பர்களின் பெரும் உழைப்பால் மாதேசுவரர் திருக்கோயிலில் கொட்டப்பட்டுக்கிடந்த குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டுத்திருப்பணி செய்யப்பெற்றது. இவ்விரு திருக்கோயில்களும் திருக்குட நன்னீராட்டுக் கண்டன.
மதுக்கரை மரப்பாலம் தருமலிங்கேசுவரர் திருக்கோயில் மலைமேல் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் திருப்பணியில் மன்ற உறுப்பினர்கள் பெரிதும் உழைத்தனர். 1996 ல் திருக்குட நன்னீராட்டு மன்றத்தின் வழி முதன்முதலில் தமிழில் நடத்தப்பெற்றது. திருவாசக வைப்புத்தலமான மொக்கணீச்சுரம் மன்றத்தின் வழி திருப்பணி செய்யப்பெற்றது.
அதன்பின்னர் மன்றம் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று பணிபுரியத் தொடங்கியது. 1997-ல் திண்டிவனம் வட்டம் வயிரபுரம் சோமசுந்தரேசுவரர் திருக்கோயில் திருப்பணி செய்யப்பெற்றுத் திருக்குட நன்னீராட்டுச் செய்யபெற்றது. 2007-ல் இரண்டாம் முறையாகவும் இக்கோயில் தமிழ்வழித் திருக்குட நீராட்டுக் கண்டது.
வந்தவாசி வட்டம் மாவலவாடி பிச்சேசுவரர் திருக்கோயில் (பல்லவர் காலம்), தாதாபுரம் இரவிகுல மாணிக்க ஈசுவரர் திருக்கோயில் (பிற்காலச் சோழர் காலம்) முதலிய பெருங்கோயில்கள் திருப்பணி மிகச்சிறப்பாகச் செய்யப்பெற்றன. இரவிகுலமாணிக்கம் என்பது இராசராச சோழனின் பட்டப்பெயராகும். குந்தவை நாச்சியார் இத்திருக்கோயிலைக் கட்டியுள்ளார். இவ்விருகோயில்களும் திருநெறிய தெய்வத் தமிழால் திருக்குட நன்னீராட்டுச் செய்யப்பெற்றன.
இருகாலூர் தேனீசுவரர் திருக்கோயில் மன்றத்தின் வழி திருப்பணி செய்யப்பெற்றது. பாலக்கோடு பால்வண்ணநாதர் திருக்கோயில், உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியர் திருக்கோயில் முதலிய பல திருக்கோயில்கள் திருக்குட நன்னீராட்டுத் தமிழ் வழியில் செய்யப்பெற்றன.
இப்பொழுது புளியம்பட்டி பெரியகுமாரபாளையம் நாகநாதர் கோயில் மிக விரிவாகத் திருப்பணி செய்யப்பெற்றுவருகிறது. திருக்கோயில் திருப்பணிகள், திருக்குட நன்னீராட்டுகளேயன்றித் திருமுறை வழித் திருமணங்கள், புதுமனை புகுவிழாக்கள், எண்பது அறுபது அகவை விழாக்கள், ஐங்கரப் பெருமான் வேள்வி, மகப்பேறு, பெயர்சூட்டல் முதலிய வழிபாடுகள் பல்லாயிரக்கணக்கில் தமிழகம் எங்கும் நடத்தப் பெற்றுவருகின்றன.
சடங்குகளுக்கான செயல்முறை விளக்கப் பயிற்சி வகுப்புகள் இதுவரை 30 இடங்களில் நடத்தப் பெற்றுள்ளன. இவை மூன்றுநாள், ஐந்து நாள் பயிற்சி வகுப்புகளாகும். இவையனைத்தும் தொண்டர்களுக்கு உணவும், இடமும் இலவசமாகத் தரப்பெற்று நடத்தப்பெற்றன. ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பயிற்சி பெற்றுச் சிறந்த முறையில் சடங்குகளைச் செய்து வருகின்றனர். இவ்வழிபாட்டுக்குத் தேவையான செயல்முறை விளக்க நூல்கள் அடக்கவிலைக்கு வெளியிடப் பெறுகின்றன. மேலும் திருமுறைகள், சாத்திரங்கள், சிறுவர்க்கான படக்கதைகள், வரலாறு, இலக்கியம் என இதுவரை பல்வேறு வெளியீடுகளை மன்றம் வெளியிட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு திரு. சத்தியவேல் முருகனாரின் தமிழ் வழிபாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமெனச் சிலர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சத்தியவேல் முருகனாருக்கு ஆதரவாகவும், தமிழ் வழிபாட்டுரிமையைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு தெய்வத்தமிழ் வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு, மன்றத்தின் பெருமுயற்சியால் கரூர் வள்ளலார் கோட்டத்தில் 16.6.2007 ல் தொடங்கப்பெற்றது. இதில் 60 தமிழ் வழி வழிபாடு புரிந்து வரும் அமைப்புகள் இணைந்தன. இக்கூட்டமைப்பின் சார்பில் 6.7.2007–இல் கோவையில் மாபெரும் உண்ணாநோன்பு நடத்தப்பெற்றது. நீதிமன்றம் தடையை நீக்கியது.
தமிழ் வழிபாட்டை நிலைநிறுத்த இதுவரை கரூர், ஆர்க்காடு, பவானி, ஆட்டையாம்பட்டி ஆகிய நான்கு இடங்களில் மாநிலமாநாடுகள் நடத்தப்பெற்றன. முனைவர். மு. பொன்னவைக்கோ ஐயா அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபோது "அர்ச்சகர்" பட்டயப்படிப்பைத் தொடங்கினார். மன்றத் தலைவர், செயலர், கரூர் வள்ளலார் கோட்ட நிறுவனர் க. குமரன் ஆகியோர் பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழுவில் இடம்பெற்றனர். பட்டயப்படிப்புக்குத் தேவையான ஒரு பகுதி நூல்கள் எழுதப் பெற்றன. அவை பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தன. மன்றத்திற்கு ஒரு மையத்தைப் பல்கலைக்கழகம் ஒதுக்கியது. மேலும் கரூர் திருச்சி என இரு மையங்களும் தொடங்கப்பெற்றன. நூற்றுக் கணக்கானோர் சேர்ந்து படித்துப் பட்டயச்சான்று பெற்றனர்.
சைவசித்தாந்த சாத்திரங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லவேண்டும் என்னும் நோக்கில் மன்றத்தின் வழி சைவப்பாட வகுப்புத் தொடங்கப்பெற்றது. தமிழகத்தில் 14 மையங்கள் தொடங்கப்பெற்று முதல் தொகுப்பில் 1135 மாணாக்கர் பயின்று சான்றிதழ் பெற்றனர். இதற்காகச் சாத்திர உரைநூல்கள் மன்றத் தலைவரால் எளிய முறையில் எழுதி அச்சிடப்பெற்றன. இப்போது இரண்டாம் தொகுப்பு நடைபெற்று வருகின்றது.
தமிழரின் பண்பாடு, சமயம், வாழ்க்கை முதலியவற்றை வெளிப்படுத்தும் முறையில் திங்களிதழ் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அதற்கான அரசு அனுமதி கிடைத்தமையால் சமயத்தமிழ் என்ற பெயரில் இதழ் தொடங்கப்பெற்றது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், அறநூல்கள், காப்பியங்கள், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள், பக்திப் பனுவல்கள் ஆகியவற்றை இத்திங்களிதழ் மக்களிடம் எடுத்துச் செல்லும். அனைத்து அன்பர்களும் ஆதரவு நல்கவேண்டும்.